சென்னை மக்களே..! அடையாறு மேம்பாலம் உட்பட இரு முக்கிய மேம்பாலங்கள் இடிப்பு! எதற்கு தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டிராபிக் நெரிசலைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், நகரில் உள்ள இரு முக்கிய பாலங்கள் இடிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிராபிக் பிரச்சினை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வளர்ச்சி காரணமாக அதிகரிக்கும் வாகன பயன்பாடே இந்த டிராபிக் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நாட்டில் அதிக டிராபிக் பிரச்சினை கொண்ட நகரங்களில் முதன்மையானது சென்னை. பீக் ஹவர் எனப்படும் பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் சமயங்களில் நாம் குறிப்பிட்ட நேரத்தை நெரிசலிலேயே செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சென்னை
சென்னையில் இந்த அதிகரிக்கும் டிராபிக்கை குறைக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரில் டிராபிக் நெரிசல் குறைக்கப் பல மேம்பாலங்கள் உள்ளன. இருந்த போதிலும், அவை டிராபிக் பிரச்சினையை முழுமையாகச் சரி செய்யவில்லை. மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைத்தால் மட்டுமே டிராபிக் நெரிசல் குறையும் என்பது வல்லுநர்களின் கருத்து. அதன்படி பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாலங்கள் இடிப்பு
இப்போது 54 கிமீ தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. இரண்டாவது கட்டமாக மாதவரம்- சிறுசேரி, மாதவரம்- சோழிங்கநல்லூர், பூந்தமல்லி- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானங்களும் தொடங்கப்பட்டு நகரில் நடந்து வருகிறது. இதனிடையே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளுக்காக நகரில் இருக்கும் இரு முக்கிய மேம்பாலங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக
அடையாரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியும் ராதாகிருஷ்ணன் சாலை-ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில் நிலத்திற்கு அடியே மெட்ரோ பணிகள் நடைபெற இருப்பதால் பாலம் இடிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவை மீண்டும் கட்டப்படும். அடையாறில் மெட்ரோ பணி தொடங்கும் முன், இடிக்கப்படும் மேம்பாலம் இருக்கும் பகுதிக்கு அருகே புதிதாக புதிய இரு லேன் கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெட்ரோ கட்டுமானத்திற்குப் பிறகு, இது மீண்டும் நான்கு வழிபாதையாக்க்பபடும்.

அடையாறு
ஆர்.கே.சாலையிலும் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்காக ஏற்கனவே உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளும் இரண்டாம் மெட்ரோ திட்டத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிமீ தொலைவில் கட்டப்படும் மெட்ரோ வழித்தடத்தில் அமைகிறது. இது வரும் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைாறு மேம்பாலம் அடையாரை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கிறது. அதேபோல ஆர்.கே.சாலையில் மேம்பாலம் ஆர்.கே.சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை நோக்கிச் செல்கிறது. ஆர்.கே.சாலை மேம்பாலம் சுமார் 50% இடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கட்டப்படும்
அடையாறு டிப்போ கீழ் அமையும் மெட்ரோ ஸ்டேஷன், பூமிக்குக் கீழே 15 மீ அமைகிறது. அதேபோல ஆர்.கே.சாலையில் அமையும் மெட்ரோ ஸ்டேஷன் 17மீ ஆழத்தில் இருக்கும். இது குறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர், "அடையாற்றில் இடிக்கப்படும் பகுதிக்கு அருகே இரண்டு லேன் பாலம் கட்டப்படும். போக்குவரத்து அதில் மாற்றியமைக்கப்படும். அடையாறு டிப்போ கீழ் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானம் அடுத்தாண்டு தொடங்க உள்ளது. இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகு. அவை மீண்டும் நான்குவழிச்சாலையும் மாற்றப்படும்.. அதேபோல ஆர்.கே.சாலையிலும் போக்குவரத்தை மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

என்ன நடந்தது
முதலில் அடையாற்றை திருவான்மியூருடன் இணைக்கும் இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிக இரும்புப் பாலத்தை அமைக்கவே அதிகாரிகள் திட்டமிட்டனர். இருப்பினும், தாற்காலிக இரும்பு பாலத்தைக் கட்டி அகற்றுவதில் எந்த பயனும் இல்லை.. ஏனெனில் இதற்கு கான்கிரீட் பாலத்தைக் கட்டுவதற்கு இணையாகச் செலவாகும். இதனால் தற்காலிக பாலம் திட்டம் கைவிடப்பட்டு.. அதற்குப் பதிலாக கான்கிரீட் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications