‛ஏய் ஏய் எதுக்கு அடிக்கிறீங்க.. பாரு ஆட்சி மாறும்’.. விரலை உயர்த்தி போலீசை எச்சரித்த எடப்பாடி
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான நிலையில் அதுபற்றி விவாதிக்க கூறி அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே, ‛‛ஏன் அடிக்கிறீங்க.. பாரு ஆட்சி மாறும்'' என விரலை உயர்த்தி ஆக்ரோஷமாக எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான நிலையில் ஏராளமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இதனை குறிப்பிடும் வகையிலும், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். சபை தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்கவில்லை. சில எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு வந்து போஸ்டர்களை கையில் ஏந்தி அமளி செய்தனர். இதனால் சபை நடத்த முடியவில்லை.
இதையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் அமளி செய்த அதிமுக எம்எல்ஏக்களை குண்டு கட்டாக வெளியேற்றினர். அப்போது இருக்கையில் இருந்த எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வேளையில் சட்டசபைக்கு வெளியே அதிமுக எம்எல்ஏக்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது எம்எல்ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியதற்கு எம்எல்ஏக்கள் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் அதிமுக எம்எல்ஏக்களை சூழ்ந்து கொண்டு நின்றனர். இதனால் நெரிசல் போன்ற சூழல் உருவானது. இந்த வேளையில் திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி கோபமடைந்தார்.
போலீஸ் அதிகாரிகளை நோக்கி ‛‛ஏய்.. ஏய்'' எனக்கூறி ஆள்காட்டி விரலை உயர்த்திய எடப்பாடி பழனிச்சாமி, ‛‛ஏன் எங்களை அடிக்கிறீங்க.. பாரு ஆட்சி மாறும்'' என கொந்தளித்தார். அதேபோல் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜுவும் போலீசாருக்கு எச்சரிக்கை செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications