வாழ்க்கையை மாற்றிய ஆட்டிசம்.. மனைவி குற்றச்சாட்டில் உண்மையில்லை.. ஸ்ரீதர் வேம்பு ட்வீட்
எனது வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே நோக்கமாகும். என்றாவது ஒரு நாள் என் அன்பு மகன் என்னுடன் இங்கே சேர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
சென்னை:
நான் இதற்கு முன்பு சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறேன், இதையும் நான் தாங்குவேன் என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் மீது மனைவி கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
கிராமப்புற இந்தியாவில் நிறுவனங்களையும் திறன்களையும் நான் தொடர்ந்து உருவாக்குவேன், இது எனது வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே நோக்கமாகும். என்றாவது ஒரு நாள் என் அன்பு மகன் என்னுடன் இங்கே சேர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு ஜோஹோ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். சென்னையை தலைமை இடமாக கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho) செயல்பட்டு வருகிறது. 1996ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஜோஹோ தற்போது அமெரிக்கா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை வாடிக்கையாளராக கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு
ஆண்டுதோறும் பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருகிறது. இளைஞர்கள் பலரும் இவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஸ்ரீதர் வேம்பு இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். அந்தவகையில், கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சிக்கு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஜோஹோ பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்புகள் தொடர்பாக இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தென்காசி பகுதியில் பல இளைஞர்கள் பயன்பெற்று ஐடி துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

குடும்பத்தில் குழப்பம்
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, பல ஆண்டுகளாக கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். கொரோனா காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்.
பங்குகள் மீதான தனது உரிமையை தனக்குத் தெரியாமல் மாற்றிவிட்டதாக ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தம்பதியர் இருவரும் கடந்த 2021ஆண்டில் விவாகரத்து வேண்டி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகினர். தற்போது இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது.

கணவர் கைவிட்டு விட்டார்
ஸ்ரீதர் வேம்பு மனைவி பிரமிளா, தனது வழக்கறிஞர் ஜான் ஃபார்லி மூலமாகத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், "ஸ்ரீதர் வேம்பு உடனான 29 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் என்னையும் எங்களுடைய மகனையும் தவிக்க விட்டுவிட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார். எங்கள் மகனுக்கு ஆட்டிசம் நோயின் பாதிப்பு உள்ளது. இதோடு போராடி வரும் சூழலில், மூன்றாண்டு காலமாக என்னையோ எனது மகனையோ சந்திக்க வரவேயில்லை. எனவே கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முறையிட்டேன். இச்சூழலில், எங்கள் இருவருக்கும் பொதுவான சொத்துக்களை எனக்கே தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

ஜீவனாம்சம்
இதன்மூலம் எனக்கு ஜீவனாம்சம் மிகக் குறைவாகக் கிடைக்கும் படி செய்துள்ளார். எனக்கும் எனது மகனுக்கும் துரோகம் இழைத்துள்ளார். கலிபோர்னியா சட்டப்படி, கணவன் மனைவிக்கிடைப்பட்ட சொத்துக்களை இன்னொருவருக்கு கை மாற்றுவது தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்பு மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்போதுதான் பொதுவில் வெளிவந்துள்ளன. ஆனால் அவரோ, தமிழ்நாட்டின் கிராம பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நான் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளேன் என்று முன்பு தெரிவித்திருந்தார். இதற்காகவே கலிபோர்னியாவிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மத்தளம்பாறை என்ற கிராமத்துக்கு வந்து அங்கே தங்கியபடி தனது அடுத்தகட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினார். இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்ரீதர் வேம்பு மறுப்பு
மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதர் வேம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார். அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை வணிக வாழ்க்கையில் இருந்து மாறுபட்டது. ஆட்டிசம் எங்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. அதன் மூலம் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை வரை தள்ளப்பட்டேன்.

ஆட்டிசம் பாதிப்பு
ஆட்டிசம் பாதித்த மகனுடன் எனது மனைவி 15 ஆண்டுகாலமாக போராடி வருகிறார். அவர் ஒரு சூப்பர் அம்மா. தனது மகனை நன்றாக கவனித்துக்கொள்கிறார். மகனை குணப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார். நானும் அதற்கு துணை நின்றேன். அப்போதுதான் என்ன மாதிரியான சிகிச்சைகள் செய்யப்படுகிற என்று தெரிந்து கொள்ள முடியும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மண வாழ்க்கை முறிவு
மகனுக்கு 24 வயதாகிறது. முடிவற்ற சிகிச்சை நீடிக்கிறது. கிராமப்புற இந்தியாவிற்கு மகனை அழைத்து வந்து உதவ நினைத்தேன். அன்பானவர்கள் இங்கு இருக்கிறார்கள், என் மகனுக்கு உதவுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் என் மனைவி புரிந்து கொள்ளவில்லை. இந்த அழுத்தங்களினாலேயே எங்களின் மன வாழ்க்கை முறிந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.

ஜோகோ நிறுவன வளர்ச்சி
எங்களின் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவர் வைத்துள்ள குற்றச்சாட்டின்படி நான் எந்த பங்குகளையும் யாருடைய பெயருக்கும் மாற்றவில்லை. எங்களின் 27 வருட திருமண வாழ்க்கையில் முதல் 24 வருடங்கள் நான் அமெரிக்காவில் வாழ்ந்தேன், மேலும் அந்த நிறுவனம் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது.

கற்பனை கதை
நான் பிரமிளாவையும் என் மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது முழு கற்பனை. அவர்கள் என்னை விட மிகவும் பணக்கார வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், நான் அவர்களை முழுமையாக ஆதரித்து வந்தேன். கடந்த 3 வருடங்களாக எனது அமெரிக்க சம்பளம் அவளிடம் இருந்தது. எங்கள் வீட்டை அவளுக்குக் கொடுத்தேன். அவரது அறக்கட்டளைக்கும் ஜோஹோ உதவி செய்கிறது.

குழப்பத்திற்கு காரணம்
இந்த குழப்பங்கள் அனைத்தும் அமெரிக்காவில் வசிக்கும் என் தந்தையின் இளைய சகோதரர் ராம் காரணமாக ஏற்பட்டது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு நான் அடைக்கலம் கொடுத்தேன், என் தந்தையுடனான பகைமையால் அவர் என்னை பழிவாங்குகிறார். என்னைப் பற்றியும் என் உடன்பிறந்தவர்கள் பற்றியும் தவறான வதந்திகளைப் பரப்பி என்னையும் என் மனைவி, மகனையும் பிரித்து விட்டார்.

போராடும் மனைவி
என் சித்தப்பா ராம், என் தந்தையிடமிருந்தும் எங்களிடமிருந்தும் பிரிந்திருந்தார், சில ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் எங்களுடன் வாழ நான் அவரை அழைக்கும் வரை எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரை கவனித்துக்கொள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து வந்தேன்.
துரதிர்ஷ்ட வசமாக என் மனைவி பிரமிளா எனது சித்தப்பா கூறுவதை நம்புகிறார். ஆதரவு அற்ற எனது சித்தப்பாவை என் வீட்டில் தங்க வைத்தேன். அவர் எனது மகனுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் நோயுடன் போராடி வருகிறார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே எங்களின் பிரிவிற்கு காரணமாகி விட்டது.

துயரமான வாழ்க்கை
இந்த துயரமான தனிப்பட்ட வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இப்போது என் சித்தப்பா ராமின் பொய்களால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன், நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். உண்மையும் நீதியும் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
நான் இதற்கு முன்பு பல தனிப்பட்ட தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறேன், இதையும் நான் தாங்குவேன்.
கிராமப்புற இந்தியாவில் நிறுவனங்களையும் திறன்களையும் நான் தொடர்ந்து உருவாக்குவேன், இது எனது வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே நோக்கமாகும். என்றாவது ஒரு நாள் என் அன்பு மகன் என்னுடன் இங்கே சேர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.












Click it and Unblock the Notifications