தேவையில்லாத பெருத்த சுமையான பாஜக.. இனியாவது முதுகில் இருந்து உதறிவிடுமா அதிமுக?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவை தங்களுடன் கூட்டணியில் வைத்து தோல்வி அடைந்த அதிமுக இனியாவது அக்கட்சியை உதறித் தள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கர்ஜித்த ஜெயலலிதா லேடியா மோடியா என தனது பிரச்சாரங்களில் பயன்படுத்தினார். என்னதான் மோடியும் ஜெயலலிதாவும் நண்பர்களாக இருந்தாலும் அரசியல் என வரும் போது பாஜக தமிழகத்திற்குள் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை.
அவர்களுடன் எந்த தேர்தலிலும் கூட்டணி வைக்கவும் அவர் விரும்பவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக 35 க்கு மேற்பட்ட இடங்களில் வென்றது. ஆனால் 2019 இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

கூட்டணி
இதற்கு காரணம் நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை ஆகும். இதிலிருந்தாவது சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாடம் கற்று கொள்ளும் என தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் ஆதரவே இல்லாத பாஜகவை தங்களுடன் கூட்டணியில் இணைத்து கொண்டது.

முன்னிலை
இதனால் அதிமுக இன்று கைமேல் பலனை கண்டது. தமிழக அமைச்சர்களின் தேர்தல் நிலவரமே இன்று இழுபறியில் உள்ளது. ஆனால் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் 5 அல்லது 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

தாராபுரம் தொகுதி
அதிலும் தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து பாஜகவின் எல் முருகன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அது போல் நீலகிரி, அரவக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது. இதுவரை அதுபோன்று அதிக வாக்குகளை பாஜக பெற்றதே இல்லை என சொல்லலாம்.

பொறுமை
இதற்கு காரணம் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததே. அதிமுகவின் செல்வாக்கால் அந்த வாக்குகள் அனைத்தும் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு சென்றுவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இனியாவது பாஜகவால் ஒரு எந்தவித நன்மையும் இல்லை என்பதை அதிமுக உணர்ந்து அதை தோளில் இருந்து இறக்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications