அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி? ஓபிஎஸ் முன் இருக்கும் வெறும் 4 ஆப்சன்.. கிளைமேக்ஸை நெருங்கும் மோதல்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களாக அதிமுகவில் நிலவிய அமைதி எல்லாம் முடிவிற்கு வந்து மீண்டும் மோதல் உச்சம் தொட்டுள்ளது.
23ம் தேதி நடக்க உள்ள செயற்குழு, பொதுக்குழுவிற்கு முன்பாக நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

என்ன பேசினர்?
நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 20 நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து பேசினார். முதலில் மாதவரம் மூர்த்திதான் ஒற்றை தலைமை பற்றி பேசி இருக்கிறார். அதன்பின் எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், குறி கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி ஹரி, அருள்மொழி தேவர், சி விஜயபாஸ்கர், கோகுல் இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோர் பேசி உள்ளனர்.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை கட்சிக்கு வேண்டும். அப்போதுதான் கட்சி வலுவாக இருக்கும். நாம் வலிமையான எதிர்க்கட்சியாக திகழ வேண்டும் என்றால் அதற்கு ஒற்றை தலைமை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று இவர்கள் கூறியுள்ளனர். நேற்று கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. தனக்கு பெரிதாக ஆதரவு யாரும் தரவில்லை என்ற விரக்தியில் ஓபிஎஸ் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பேசி வருகிறார்
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக முன்மொழிய சொல்ல எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருகிறாராம். இதற்காக வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் அவர் இன்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர வேண்டும். அது வெற்றிபெற வேண்டும். மற்ற மாவட்டங்களில் தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாராம்.

சமாதானம்
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பிரச்சனை இல்லாமல் தனக்கு இந்த பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறாராம். இதற்காக ஆர்பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் நேற்று ஓபிஎஸ்ஸை சென்று சந்தித்து உள்ளனர். ஆனால் அவர்களை ஓபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசவிடவில்லை என்று கூறப்படுகிறது. இன்றும் சில நிர்வாகிகள் ஓபிஎஸ் வீட்டிற்கு இரண்டு முறை சென்று அவரை சமாதானம் செய்ய முயன்று உள்ளனர்.

ஆப்ஷன் 1 - நிர்வாகிகளிடம் பேசுவது
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் ஆகாமல் தடுக்க ஓபிஎஸ்ஸுக்கு 4 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளனவாம். முதல் ஆப்ஷன், தனக்கு ஆதரவான அணியை திரட்டுவது. முக்கியமாக 1ல் மூன்று பங்கிற்கு அதிகமான எம்எல்ஏக்களை திரட்டுவது. இதன் மூலம் சட்டசபையிலும், பொதுக்குழுவில் தனக்கு ஒரு விதமான சப்போர்ட்டை உருவாக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவரின் கேம்ப் இப்போது கிட்டத்தட்ட எம்படியாகவே இருக்கிறதாம்.

ஆப்ஷன் 2 - தள்ளிப்போடுவது
இது இல்லையென்றால் லோக்சபா தேர்தல் வரை இந்த விஷயத்தை தள்ளிப்போடுவது. எதிர்ப்புகளை காட்டி, மாவட்ட செயலாளர்களை வைத்து அழுத்தம் கொடுத்து, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒற்றை தலைமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, இப்போதைக்கு இந்த விஷயத்தை ஆறப்போட ஓபிஎஸ் முயற்சி செய்யலாம். ஆனால் அதுவும் சான்ஸ் இல்லை என்கிறார்கள். நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் எடப்பாடி ஆதரவாளர்கள் அதிகமாக வென்றதால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

ஆப்ஷன் 3 - சசிகலா
மூன்றாவது ஆப்சன் சசிகலா மூலம் மீண்டும் கட்சிக்குள் பிரச்சனை செய்வது. சசிகலாவிற்கு ஆதரவானவர்களை திரட்டுவது. அவர்களை தன் பக்கம் கொண்டு வந்து, சசிகலா ஆதரவுடன் கட்சிக்குள் கலகம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை ஓபிஎஸ் முயற்சி செய்வார்கள் என்கிறார்கள். சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தனக்கு எதிராக காரியங்கள் திரும்பினால் சசிகலாவை சந்திக்க ஓபிஎஸ் புறப்படுவார் என்கிறார்கள்.

ஆப்ஷன் 4 - சட்ட போராட்டம்
எல்லாம் கைமீறி போய்.. ஒருவேளை பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டால் ஓபிஎஸ்ஸுக்கு கட்சிக்கு எதிராக செல்ல வேண்டியதை தவிர வேறு வழியில்லை. பொதுக்குழு முடிவை எதிர்த்து சட்ட போராட்டம் செய்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இதிலும் பல சிக்கல்கள் உள்ளன, பொதுக்குழு பெரும்பான்மை முடிவு எடுத்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற சிக்கல் உள்ளதால், ஓபிஎஸ்ஸுக்கு சட்ட ரீதியான ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications