புதிய சட்டத்தில் இ-மெயில், இன்ஸ்டாவையும் வருமான வரித்துறை உளவு பார்க்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன
சென்னை: நாட்டில் தற்போது அமலில் உள்ள வருமான வரி சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி, வரி செலுத்துவோரின் இ-மெயில், சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இது வரி செலுத்துவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்த நிலையில், இது தொடர்பான விளக்கம் அதிகாரிகள் தரப்பில் வெளியாகியுள்ளது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, இனி ரூ. 12 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இது நாடு முழுக்க மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் அறிவிப்பாக இருந்தது. அதபோல, நாட்டில் தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமானவரி மசோதா- 2025 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம்
இந்த மசோதாவின்படி வருமான வரித்துறைக்கு கூடுதல் பவர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள் அதாவது பேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ்,டெலிகிராம் உள்ளிட்ட போன்ற சோஷியல் மீடியா கணக்குகளை ஆய்வு செய்யவும் வருமானவரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இது வரி செலுத்துபவரின் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது போல இருக்கும் என பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், தற்போது இது தொடர்பாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இது குறித்து விளக்கம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வரி ஏய்ப்பினை நிரூபிக்க ஆதாரம் தேவைப்படுகிறது
சமூக வலைத்தள கணக்கு விவரங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யும் என்ற தகவலில் உண்மையில்லை. டிஜிட்டல் தளங்கள் மற்றும் கம்ப்யூட்டர் டிவைஸ்கள் உள்ளிட்டவற்றை அணுகுவதற்கு புதிய வருமான வரி சட்டத்தில் அனுமதி உள்ளது. இது ஏற்கனவே 1961 வருமான வரி சட்டத்திலேயே உள்ளது. டிஜிட்டல் கணக்குகளில் இருந்து ஆதாரங்கள் பெறுவது என்பது வரி ஏய்ப்பை நிரூபிக்க முக்கிய ஒன்றாக இருக்கிறது.
ஏனெனில் தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைத்து முக்கிய தகவல்களும் சர்வரில் சேமிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள சேமிப்பு வசதிகளில் வைக்கப்பட்டால் அவற்றை இங்கிருந்து பார்க்க முடியாது. இதற்கான சீக்ரெட் எண் என இது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நபர் அளிப்பது கிடையாது. இதனால், சோதனைக்கு உள்ளாகும் நபர் தப்பும் நிலை உள்ளது. எனவேதான், ரெய்டின் போது டிஜிட்டல் வடிவத்தில் கணக்குகளை ஆய்வு செய்ய ரகசிய எண் பெற ஐடி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உளவு பார்ப்பதாக சொல்லும் தகவல் உண்மையில்லை
தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின் 132 வது பிரிவில் கூட இதற்கான அதிகாரம் உள்ளது. இதுதான் புதிய மசோதாவிலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஐடி ரெய்டு நடக்கும் சமயத்தில் மட்டுமே இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட சோதனைக்கு உள்ளான நபர் எந்த தகவலையும் அளிக்க மறுத்தால் மட்டுமே இந்த அதிகாரத்தை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள். டிஜிட்டல் கணக்குகளில் இருந்து தகவல்கள் பெறுவது என்பது வரி ஏய்ப்பு நிகழும் போது நீதிமன்றத்தில் நிரூபிக்க அத்தியாவசியம் ஆகிறது.
வரி செலுத்தும் சாமானிய நபர்களை குறிவைத்து இந்த அதிகாரம் மசோதாவில் கொண்டு வரப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு சுமார் 8.79 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதில், 1% கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவே, சமூக வலைத்தள கணக்குகளை ஊடுருவி அவற்றை வருமான வரித்துறை உளவு பார்க்கும் என்ற தகவலில் உண்மையில்லை. அச்சத்தை உண்டாக்கும் நோக்கத்தில் இவை பரப்பப்படுகின்றன" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications