தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு.. அடுத்து இந்த அறிவிப்பும் வெளியாக போகுதா? ஒரே குஷிதான்!
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் ஆசிரியர் குழு கூட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு தேதிகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக பள்ளிகள் 7ம் தேதி திறப்பதாக இருந்தது. வெயில் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டது. 7ம் தேதி பள்ளிகள் திறந்ததும் 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இப்போது இந்த குழு கூட்டமும் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு கூட்டம் தள்ளி வைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழு கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும். புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்த குழு கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் கண்டிப்பாக வரும் 9ம் தேதி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருந்தது. ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதால் இப்போது இந்த குழு கூட்டமும் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளி வைக்கப்பட்டது ஏன்? : பொதுவாக ஜூன் முதல்வாரம் தமிழ்நாட்டில் லேசாக மழை தொடங்கும். மழை இல்லை என்றாலும் வெயில் குறையும். இதனால் மாணவர்கள் பள்ளிகள் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை வெயில் குறையவில்லை. மாறாக வெயில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வரை கூட உயர்ந்து உள்ளது.
இதனால் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஆகும். இதை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பள்ளி திறப்பு முன்னதாக 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் வெயில் குறையாத காரணத்தால் தற்போது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை முடிவில் இந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாகவே மே 5 அல்லது 7ம் தேதியில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்ற போது ஜப்பானில் இருந்த முதல்வர் ஸ்டாலின் 7ம் தேதியை தேர்வு செய்தார். வெயிலை கருத்தில் கொண்டு 7ம் தேதியை அவர் தேர்வு செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின்தான் புதிய தேதிகளை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் தீவிர ஆலோசனைக்கு பின் சில தேதிகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிலபஸ் முடிக்க வேண்டும். அதனால் கொஞ்சம் முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.
அதனால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதே சமயம் சிறு குழந்தைகள் வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாக திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் , 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications