அமரனுக்கு புது சிக்கல்! சாய் பல்லவி வீசிய நம்பரால் தூக்கம் போச்சு! ரூ1 கோடி இழப்பீடு கேட்கும் இளைஞர்
சென்னை: அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் தன்னுடைய செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதற்கு, அமரன் பட நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக கேட்டு சென்னை என்ஜினீயரிங் மாணவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை சாய் பல்லவி என்று நினைத்து எனக்கு தொடர்ந்து கால்கள் வருவதால் மன வேதனை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் சுட்டுக்கொல்லப்பட்டார். ராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்தியேகன் - சாய் பல்லவி நடித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. முகுந்த் கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயேன் நடிப்பும், இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இருவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டதாக பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல, நல்ல வசூலையும் அள்ளி குவித்து வருகிறது.
இதனிடையே, அமரன் படத்தில் சாய் பல்லவி, ஒரு துண்டு சீட்டில் தனது செல்போன் எண்ணை எழுதி, சிவகார்த்தியேகனிடம் வீசுவார். அந்த போன் நம்பரை எளிதில் ரசிகர்கள் பார்க்கும்படி திரையில் காட்டப்பட்டு இருக்கும். இதனால், படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த நம்பரை குறித்து வைத்து, அது சாய் பல்லவி நம்பர் என்று நினைத்து கொண்டு, அந்த நம்பருக்கு பலரும் அழைப்பு விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
இதனால், உண்மையிலேயே அந்த செல்போன் எண்ணை வைத்து இருந்த இளைஞர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை சேர்ந்த என்ஜினீயர் மாணவர் வி.வி. வாகீசன் என்பவர் தான் அந்த செல்போன் எண்ணை வைத்துள்ளார். அமரன் படத்தை பார்த்துவிட்டு, அது சாய் பல்லவியின் போன் நம்பர் என்று நினைத்துக் கொண்டு, 100-க்கும் அதிகமான போன்கள் தனக்கு வந்து கொண்டேயிருப்பதாக வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், அடிக்கடி போன் வருவதால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தான் இந்த செல்போன் எண்ணை 2 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருப்பதாகவும், வங்கி கணக்கு, ஆதார் என எல்லாவற்றிற்கும் இந்த செல்போன் நம்பரை தான் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
குறிப்பாக படம் வெளியான நாளில் மட்டும் 100 மிஸ்டு கால்கள் இருந்ததாகவும், நிறைய மெசேஜ்கள் வந்ததாகவும் கூறினார். இன்னும் போன் வந்துகொண்டிருப்பதால் போனை சைலண்டில் போட்டு வைத்திருந்ததாகவும், இதனால் முக்கியமான கால்களை கூட எடுக்க முடியாமல் போய்விடுகிறது என்று புலம்பியிருக்கிறார் வாகீசன். இந்த நிலையில் அமரன் படக்குழுவினரிடம் ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்டு வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமரன் படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் தன்னுடைய செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதற்கு, அமரன் பட நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படம் வெளியான நாளில் இருந்து இப்போது வரை தொடர்ந்து வரும் கால்களால் மன வேதனை அடைந்திருப்பதாகவும் வாகீசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications