"கோவையின் பெருமை.." சாதாரண டீ கடை டூ ஹோட்டல் சாம்ராஜ்ஜியம்.. இதுதான் அன்னபூர்ணா ஹோட்டல் வரலாறு
கோவை: கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்துப் பேசியது இணையத்தில் டிரெண்டானது. இதற்கிடையே திடீரென்று அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீனிவாசன் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார். இதைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அன்னபூர்ணா ஹோட்டல் எப்படி தொடங்கப்பட்டது. இதன் வரலாறு என்ன என்பதைப் பார்க்கலாம்.
கோவையில் நேற்று முன் தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பல்வேறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

சர்ச்சை: அதில் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், "ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். குறைத்தால் எல்லாவற்றுக்கும் குறையுங்கள். இல்லையென்றால் ஒரே மாதிரி உயர்த்திவிடுங்கள்" என்று பேசியிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது.
இதற்கிடையே திடீரென்று அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீனிவாசன் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார். பாஜக தான் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்ததாகப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ராகுல் காந்தி கூட கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் அன்னபூர்ணா ஹோட்டல் எப்படித் தொடங்கப்பட்டது. இதன் வரலாறு என்ன என்பதைப் பார்க்கலாம்.
தொடக்கம்: அன்னபூர்ணா பயணம் முதலில் கோவை ஆர்எஸ் புரத்தில் 1960களில் தொடங்கியது. அன்னபூர்ணாவின் உரிமையாளர் தாமோதரசுவாமி நாயுடு முதலில் அங்கே டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். பிறகுத் தனது சகோதரர்கள் ரங்கசாமி, ராமசாமி மற்றும் லக்ஷ்மண் ஆகியோரை சேர்த்துக் கொண்டு அப்போது புகழ்பெற்று இருந்த கோவை கென்னடி தியேட்டருக்கு அருகே தள்ளு வண்டி கடையைத் தொடங்கினார்.
தள்ளு வண்டி கடையாக இருந்தாலும் நல்ல சுவையில் சரியான விலைக்கு உணவுகளை வழங்கியதால் கோவை மக்கள் அன்னபூர்ணாவுக்கு அமோக ஆதரவு அளித்தனர்.
திருப்பம்: இவர்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து 1960களில் பிற்பகுதியில் கென்னடி தியேட்டரின் உரிமையாளர் அவர்களின் உறுதியைக் கண்டு வியந்தார். மேலும், உணவும் சுவையாக இருந்ததால் தனது தியேட்டருக்குள் கேண்டீனை நடத்த அனுமதித்தார். அங்கு தான் அன்னபூர்ணாவின் ஐக்கானாக இப்போது இருக்கும் கீரை வடை மற்றும் ஃபில்டர் காபி முதலில் விற்பனைக்கு வந்தது.
அந்தக் காலத்தில் தியேட்டரில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் தரம் மிக மோசமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இவர்கள் சூடான ஃபில்டர் காபியையும் சுடசுட வடையையும் தியேட்டருக்குள் கொடுத்து மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அங்கு இவர்களின் பிஸ்னஸ் பல்கிப் பெருகியது. இரண்டே ஆண்டுகளில் இவர்கள் சென்ட்ரல் தியேட்டரில் மற்றொரு கேண்டீனை எடுத்து நடத்தினர்.
உணவகம்: உணவின் தரம் மிகச் சிறப்பாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் இடைவெளையின்போது கூட்டம் கேன்டீனில் நிரம்பி வழியும். படத்தைத் தாண்டி இவர்களின் உணவுக்காகவே அங்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். இது தான் சரியான நேரம் என்பதை உணர்ந்த தாமோதரசுவாமியும் அவரது சகோதரர்களும் தங்கள் பிஸ்னஸை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி முதலில் ஆர்எஸ் புரத்தில் தங்களின் முதல் பேக்கரியை ராயல் காபி பார் என்ற பெயரில் திறந்தனர். அதற்கும் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திவான் பகதூர் சாலையில் வாடகைக்கு ஒரு இடத்தை கண்டுபிடித்து ஹோட்டலை தொடங்கினர். தங்கள் முதல் உணவகத்திற்கு உணவின் தெய்வமான அன்னபூரணா பெயரை வைத்தனர். ஸ்ரீ அன்னபூர்ணாவின் முதல் கிளை 1968ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
கோவையின் பெருமை: அப்போது கோவை நகரில் கென்னிஸ் பவன் மற்றும் ஐடியல் காபி ஹவுஸ் ஆகிய இரண்டும் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் இரண்டையும் தாண்டி அன்னபூர்ணா மளமளென வளர்ந்தது.. அன்னபூரணா வழங்கிய தரமும் சுவையுமே இந்த உணவகத்தை அடுத்தடுத்து வளர காரணமாக இருந்தது. கிட்சனில் பல புதுமைகளை புகுத்திய அன்னபூர்னா உணவகம் கோவையின் பெருமை என்ற பெயரையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications