குங்குமம்-மஞ்சள் கயிறு கொடுத்தனுப்பிய பங்காரு அடிகளார்! திகில் கதை ராஜேஷ்குமார் பகிர்ந்த ஃபிளாஷ்பேக்
கோவை: பங்காரு அடிகளாரை அவர் காலமாகும் வரைக்கும் தாம் நேரில் பார்த்ததில்லை என்றும் இருப்பினும் 1988ஆம் ஆண்டு தனக்கு குங்குமத்தையும், மஞ்சள் கயிற்றையும் அவர் கொடுத்தனுப்பினார் எனவும் பழைய நினைவலைகளை பகிர்ந்துள்ளார் திகில் கதை மன்னன் ராஜேஷ்குமார்.

பங்காரு அடிகளார் குறித்து ராஜேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''1988 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த வாசகர் ஆனந்தன் என்பவர், மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் அவர்களைச் சந்தித்து, கண்களில் நீர் கோர்க்க, ஒரு கோரிக்கை வைக்கிறார்.
என்னுடைய அபிமான எழுத்தாளர் ராஜேஷ்குமாரைப் பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும், ஒரு பத்திரிக்கை எழுதிக் கொண்டிருக்கிறது. அதை எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, நான் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு, நீங்கள் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு பங்காரு அடிகளார் அவர்கள் "ராஜேஷ்குமார் அவர்களுக்கு இனிமேல் தான், நல்ல காலம். அந்தப் பத்திரிகை அப்படி எழுதியது ஒரு திருஷ்டி பரிகாரம். இனிமேல்தான் அவர் மேன்மேலும் உயர்வார். எழுத்துலகில் ஓர் உச்சத்தை தொடுவார். இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி, குங்குமத்தையும், மஞ்சள் கயிற்றையும் கொடுத்து, அவர்க்கு இதை அனுப்பி வை என்றார். சில வாரங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, வாசகர் ஆனந்தும் எனக்கு அவற்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள், அந்தப் பத்திரிகை ஆசிரியர்க்கு, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு நடத்திக் கொண்டிருந்த, பத்திரிகைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சொத்து, சுகத்தை இழந்து என் வீட்டிற்கு வந்து அழுதபடி மன்னிப்பு கேட்டார். இதுவரைக்கும் பங்காரு அடிகளார் அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் 1988 முதல் எப்போதும் அவரோடு இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை அடைந்து கொண்டே இருக்கிறேன். அவர் மறையவில்லை, எங்கும் நிறைந்து விட்டார்.'' இவ்வாறு ராஜேஷ்குமார் தனது பழைய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications