கோவை நகைப்பட்டறையில் 1 கிலோ தங்கம் மிஸ்ஸிங்.. தங்கத் துகள் எடுப்போருக்கு வந்த பேராசை! கடைசி ட்விஸ்ட்
கோவை: தங்கத்தின் விலை உச்சியிலேயே உள்ளது.. ஒரு கிராம் ரூ.12,000-க்கும், அதாவது ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.. இப்படி தங்கம் விலை குறையாத நிலையில், நகைகளை கொள்ளையடிப்பது தொடர்கதையாகி வருகிறது.. அதிலும் கோவை நகை பட்டறையில் நடந்த கொள்ளை சம்பவம், மாவட்டத்தையே அதிர வைத்துவிட்டது. அதுகுறித்த கூடுதல் தகவல்கள்தான் தற்போது வெளியாகி உள்ளது.
கோவை வடவள்ளியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்.. இவர் சாமி அய்யர் வீதியில் சிறிய நகை பட்டறை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

தங்கக் கட்டிகளை வாங்கி, அதை ஆபரணமாக செய்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வருவது இவரது வழக்கமான தொழிலாகும்.. அப்படித்தான் கடந்த சனிக்கிழமை இரவு, வழக்கம்போல பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்..
ஒரு கிலோ தங்கம்
ஆனால் அதிகாலை 3 மணியளவில், அருகில் வசிக்கும் சரவணன் யதேச்சையாக எழுந்து பார்த்தபோது., பட்டறை கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் முழுவதும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அந்த நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி என்கிறார்கள்.
உடனே வெரைட்டிஹால் ரோடு போலீசுக்கு சென்று நவநீதகிருஷ்ணன் புகார் தந்தார்.. இந்த புகாரையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.
நகை பெட்டகங்கள்
அப்போதுதான், கொள்ளை நடந்ததாக கூறப்படும் நகைப்பட்டறையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், இரும்பு கிரில் அமைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது..
பொதுவாக நகைப்பட்டறை மற்றும் நகைக்கடைகளை இரவில் அடைக்கும் போது, அனைத்து ஊழியர்களும் சென்றபிறகு, நகைகளின் எண்ணிக்கை மற்றும் எடை சரிபார்க்கப்பட்டு, கடைகளில் உள்ள பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால், கொள்ளை நடந்த நகைப்பட்டறையில், அப்படி எதுவுமே செய்யாமல் மரப்பெட்டிகளில் வைத்திருந்ததுதான் கொள்ளையருக்கு வசதியாக போய் விட்டதும் தெரியவந்தது..
நகைப்பட்டறையில் யார்
எனினும், கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசார் தீவிரமாக இறங்கினார்கள்.. இதற்காகவே 5 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன.. அங்கு சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போதுதான் வீடியோக்களில், 2 பேர் தங்க நகைகள் இருந்த பெட்டியையே அலேக்காக தூக்கி செல்வது பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்... சிசிடிவி காட்சி அடையாளங்களை தொடர்ந்து தீவிரமான தேடுதல் வேட்டை நடந்தது.. இறுதியில் கணுவாய் அருகே மறைந்திருந்த அந்த 2 பேரையுமே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தங்கத் துகள்கள்
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர்கள் முருகன் (45), அவரது மைத்துனர் சின்னதுரை (32) என்பது தெரியவந்தது. இதில் முருகன் என்பவர் மீது முன்பே ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த 500 கிராம் நகை திருட்டு வழக்கு பதிவாகியிருக்கிறது.. அதேபோல சின்னதுரை மீதும் தூத்துக்குடியில் 3 கேஸ்கள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் 2 பேருமே, சாக்கடை பகுதியில் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்பவர்களாம்.. ஆனால், இந்த முறை, நகை பட்டறையை உடைத்து நேரடியாகவே நகைகளை அபகரித்து பெரும் தொகையை பார்த்துவிடலாம் என்று பேராசையுடன் முடிவு செய்து, இப்படியான காரியத்தில் இறங்கினார்களாம்.
24 மணி நேரத்தில் அதிரடி
இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.. கோவை முழுவதும் பேசப்பட்ட இந்த இரவு கொள்ளை, போலீசாரின் துல்லியமான கண்காணிப்பு கேமரா ஆய்வால் உடனடியாகத் தீர்வு கண்டுள்ளது.
அதுமட்டுமல்ல, நள்ளிரவு நேரத்தில் நடந்த நகை கொள்ளை, போலீசாரின் வேகமான நடவடிக்கையால் 24 மணி நேரத்துக்குள் முடிவுக்கு வந்தது, மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications