அப்பாவின் அரசு வேலை கிடைத்த பின் தாயை கவனிக்க மறுத்த மகள்.. கோவை நீதிமன்றம் மறக்க முடியாத தீர்ப்பு
கோவை: தன்னை பராமரிக்க தவறிய மகளுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தாய்க்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோவை வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தையின் வேலையை வாரிசு வேலையாக வாங்கிய மகளுக்கு, நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த பொன்னுசாமி என்பவருடைய மனைவி ஆராயி. இவருக்கு 52 வயது ஆகிறது. இவர்களுக்கு 35 வயதில் கவிதா, 33 வயதில் மஞ்சு, 31 வயதில் கவுரி ஆகிய 3 மகள்கள் இருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த பொன்னுசாமி, 28.12.2013 அன்று பணியில் இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து கருணை அடிப்படையில் அவரது வாரிசான மகள் கவுரிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர், தனது தாயை பராமரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தாய், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்,
ஆண் வாரிசு இல்லாத நிலையில் பெண் வாரிசு தாயை பராமரிக்க கடமைப்பட்டவர் என்றும் அரசு பணியில் போதிய வருமானத்துடன் இருப்பவர் என்ற அடிப்படையில் தனக்கு கவுரி ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்று 18.11.2022 அன்று வால்பாறை நீதிமன்றத்தில் ஆராயி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், ஆண் வாரிசு இல்லாததால் பெண் வாரிசு ஜீவனாம்சம் தர கடமைப்பட்டவர் என்றும் இந்த வழக்கில் மற்ற 2 மகள்களுக்கும் போதிய வருமானம் இல்லாத நிலையில் அரசு பணியில் இருக்கும் கவுரி தாய் ஆராயிக்கு ஜீவனாம்சம் தர தகுதி உடையவர் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
18.11.2022 அன்று முதல் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் கணக்கிட்டு மொத்தம் 16 மாதங்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்றும் அதோடு ஆராயிக்கு நீதிமன்ற செலவுக்காக ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் வால்பாறை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications