சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய் – சம்பவம் செய்த கோவை போலீஸ்
கோவை: மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமான பிராணி நாய் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமாக ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் சமீபகாலமாக தெருநாய்கள் மட்டுமல்லாமல் வளர்ப்பு நாய்களும் மனிதர்களை கடித்து அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கோவை காந்திபுரம் அருகே தெருவில் நடந்து சென்ற பெண்ணை, உரிமையாளருடன் வந்த நாய் கடித்து குதறி பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையான தெருநாய் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது என்று தினசரி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே ஒரு வெறி நாய் நான்கு வயது சிறுவனை கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இப்படி தினம் தினம் நாய்களால் ஏதாவது பிரச்னை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

தெருநாய்களால் மட்டுமல்ல வளர்ப்பு நாய்களாலும் பாதிப்புகள் இருக்கவே செய்கிறது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் கடந்த மே மாதம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, புகழேந்தி என்பவரின் வளர்ப்பு இரண்டு நாய்கள் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தின. இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து, புகழேந்தி உள்ளிட்டோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நாய்களை வளர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்தப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி அருண் - சிந்து. இந்நிலையில் சிந்துவின் அம்மா பிரேமா காந்திபுரம் பகுதி அருகே வசித்து வருகிறார். சிந்து தன் அம்மாவை பார்ப்பதற்காக காந்திபுரத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு செல்வார். அதன்படி கடந்த 14ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள தன் அம்மாவின் வீட்டுக்கு சென்று, சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பியுள்ளார். பேருந்தை பிடிப்பதற்காக சிந்து சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஐசக் பாபு என்ற 60 வயது முதியவர் எதிரில் தன் நாயுடன் வாக்கிங் வந்துள்ளார்.
சிந்து சகஜமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென்று அந்த நாய் சிந்துவை கடிக்க தொடங்கியது. சிந்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த நாய் அவரை மூர்க்கதனமாக கடித்து குதறியது. அந்த நாய் பயங்கரமாக கடித்ததில் சிந்துவின் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். வீடு திரும்பியதும் சிந்து இந்த சம்பவத்தை தன் கணவர் அருணிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் சிந்துவை நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிந்துவுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இருந்தபோதும் இந்த சம்பவம் சிந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த நாய் கடித்ததில் சிந்துவின் கை பலத்த காயமடைந்த படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த நாய் மற்றும் அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து சிந்து ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரத்தினபுரி போலீஸ், வெறி நாயின் உரிமையாளர் ஐசக் பாபு என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications