கோவையில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிவிட்டு ஓட முயன்றவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு
கோவை: கோவை சூலூர் அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக கோவை சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்களை தேடும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் கோவை சூலூர் அருகே இதில் தொடர்புடைய நபர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். இதில் அவர் தான் வைத்திருந்த அரிவாளால் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications