டிடி நெக்ஸ்ட் லெவல் கோவிந்தா..கேஸ் மேல கேஸு கோவிந்தா..! சந்தானம் மீது குவியும் புகார்கள்..பரபரப்பு
கோவை: ஆர்யா தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் திருப்பதி ஏழுமலையானை கிண்டல் அடித்திருப்பதாக கூறி பிரச்சனை கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் பெருமாளை இழிவுபடுத்திய சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு ஈடுபட்டுள்ளது.
தில்லுக்கு துட்டு படத்தின் தலைப்பு ராசியாக அமைந்ததால் அதற்குப் பிறகு வரும் அனைத்து படங்களையும் டிடி ரிட்டர்ன்ஸ், டிடி நெக்ஸ்ட் லெவல் என பயன்படுத்தி வருகிறார், இந்த நிலையில் தற்போது யூட்யூபராக சந்தானம் நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் தயாரிக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடல் வெளியானது. கோவிந்தா என தொடங்கும் அந்த பாடலில் பெருமாள் குறித்து கிண்டல் செய்திருப்பதாக கூறி பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக ஆந்திராவின் ஜனசேனா கட்சி அங்கு போர்க்கொடி தூக்கி இருக்கிறது. மேலும் சந்தானம் 100 கோடி ரூபாய் தர வேண்டுமென திருப்பதி தேவஸ்தானமும் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதே நேரத்தில், கோவிந்தா கோவிந்தா பாடலில் யார் மனதையும் புண்படுத்தவில்லை. நான் பெருமாள் பக்தர் என்பதால் அந்த பாடலை வைத்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்து தான் செல்வேன்" என சந்தானம் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நிலையில் பெருமாளை இழிவுபடுத்திய சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் அளித்துள்ள புகாரில்," நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒரு பாடலில், இந்து மக்கள் வணங்கும் வெங்கடேச பெருமாளின் பாடல் கேலி, கிண்டல் செய்து பாடப்பட்டு இருந்தது. இது இந்து மதத்தின் மீதும், இந்து தெய்வத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட எங்களுடைய மனதை புண்படும்படியாகவும், இந்து மக்கள் வணங்கும் பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது.
இந்து மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், இந்தப் பாடல் உள்ளது. எனவே, இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளான பெருமாளையும் இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட திரைப்பட நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தானம் மீது பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்துக்கு சிக்கல் முளைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications