கேலிச்சித்திரமா வரையறீங்க.. 2026 இல் இருக்கு கச்சேரி.. கொந்தளிப்பில் எடப்பாடி பழனிசாமி
கோவை: திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்களை உருவாக்கி அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் 2026 இல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருள்பட தான் அமித்ஷா பேசியிருப்பதாகவும், அனைவருக்கும் தாய்மொழி முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் மாப்பா பாண்டிய ராஜன் கீழடி அகழாய்வு குறித்து தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்.
ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம். அவரது மறைவுக்குப் பின் கீழடி ஆராய்ச்சி எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து தெளிவாக கூறி விட்டோம். கீழடி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கேட்டபோது, அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவர் விருப்பம். அது ஜனநாயகத்தின் உரிமை. முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துகின்றனர். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துகள்.
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என அமித்ஷா கூறிய கருத்துக்கு, அது அவரது தனிப்பட்ட கருத்து. அதே சமயம் அவர் தாய் மொழி முக்கியம் என கூறியிருக்கிறார். அனைவருக்கும் தாய் மொழி என்பது மிக மிக முக்கியம். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருள்படதான் அவர் கூறி இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரைக்கும் மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது, அவதூறுகளை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கேலி சித்திரங்களுக்கு 2026 இல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதனை பிரதமர் முன்னெடுத்து நடத்தி வருகிறார் அதற்கு வாழ்த்துகள் என்றார்.












Click it and Unblock the Notifications