உங்களை கை கூப்பி கேட்கிறேன்.. கோவையில் வணக்கம் போட்டு விளக்கம் சொன்ன நிர்மலா சீதாராமன்
கோவை: ஜிஎஸ்டியில் இனிப்பு வகைக்கு ஒரு வகையிலான வரியும், கார வகை உணவுக்கு ஒரு வகையிலான வரியும் இருப்பதாக கோவை ஹோட்டல் உரிமையாளர், நிதியமைச்சர் சீதாராமன் முன்பு ஹோட்டல் துறையில் உள்ள சட்ட சிக்கல்களை நகைச்சுவையுடன் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகலைதளங்களில் வைரலானது. இதற்கு நிர்மலா உணர்ச்சிவசத்துடன் விளக்கமளித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்துள்ளார். நேற்று அவர் கோவை தொழில்துறையினரை சந்தித்து உரையாடினார். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது." என்று கூறினார்.

அவரின் வீடியோ வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் கோவையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர், "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். காதால் கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அந்தக் குழுவில் பரிந்தரை வந்துள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி குழுவில் கூட, அந்தப் பரிந்துரையை ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளோம். ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும்.
'பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு. எல்லாரும் சிரிக்கறாங்க. அந்த அம்மாவுக்கு விசயம் தெரியுமா.' என்று சொல்வார்கள். நான் எந்த யாருடைய கருத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை. ஜிஎஸ்டியை எளிதாய், மக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம். கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டு அமைச்சரும் உறுப்பினராக உள்ளார். இந்த 7 ஆண்டுகளிலும், எந்த ஒரு முடிவும் யாரின் எதிர்ப்பை மீறி எடுக்கவில்லை. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுப்போம். யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. நான் எதையும் முடிவு செய்யவில்லை. சமீபத்தில் கூட, மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உண்மையில் ஜிஎஸ்டிக்கு முன்பே மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருந்தது. அதை இப்போது குறைத்துள்ளோம்.
வங்கிகளில் ஜன்தன் கணக்கு, சேமிப்பு கணக்கு உள்ளிட்ட எதற்கும் கட்டணம் இல்லை. இதுபோன்ற தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஏழைகளிடம் பணம் வசூல் செய்வதற்கான திட்டம் எப்போதும் இல்லை. உங்களை கை கூப்பி கேட்கிறேன், இந்த செய்தியை விசாரிக்காமல் யாரும் வெளியிட வேண்டாம். ஏதாவது புகார் இருந்தால் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications