திருச்சூர் டூ நாமக்கல்.. நம்ப முடியாத தந்திரம்.. மிரள வைத்த சேசிங்.. இதுதான் ரியல் தீரன் அதிகாரம்
கோவை: 2003 ஆம் ஆண்டு வெளியான 'தி இத்தாலியன் ஜாப்' திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகளை நினைவூட்டும் வகையில், கேரளா, தமிழ்நாடு இரு மாநிலங்களை கலங்கடித்த ஏடிஎம் கொள்ளை அரங்கேறியுள்ளது. கொள்ளையர்களின் நூதன தந்திரங்கள், போலீசாரின் துரித நடவடிக்கை, சேஸிங் என உலகின் மிகப்பிரபலமான எந்த ஒரு பரபரப்பு திரைப்படத்திற்கும் பஞ்சமில்லாத அளவுக்கான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூன்று ஏடிஎம்-களில் ஹரியானா கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசை காட்டியதோடு தொடங்கியது இந்த சேஸிங் சம்பவம். ஒரு கொள்ளையன் கொல்லப்பட்டு மற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டதோடு இந்த சேஸிங்கிற்கு சுபம் போடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது என்பதை பார்க்கும் முன்பு யார் செய்தார்கள் என்பதை அறிய வேண்டும். இந்த கொள்ளையில் ஈடுபட்டது அரியானாவின் மேவாட் கொள்ளை கும்பல்.. பொதுவாக ஏடிஎம்களை கொள்ளையடிக்கு மேவாட் கொள்ளை கும்பல், அதற்கு மிகவும் நுட்பமான விஷயங்களை மேற்கொள்வார்கள். ஏடிஎம்களை கொள்ளையடிக்க வேண்டும் என்றால் கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்க செய்ய வேண்டும். அதை மக்கள் அதிகம் நடமாடாத இரவு நேரங்களில் தான் மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம் ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமராக்கள் நீண்ட நேரம் வேலை செய்யாமல் இருந்தால், அதை மும்பையில் இருந்தோ சென்னையில் இருந்தோ கண்காணிக்கும் அதிகாரி உடனடியாக போலீசுக்கு அலர்ட் செய்துவிடுவார். இதையும் பார்க்க வேண்டும். அதேபோல் ஏடிஎம் மையம் பழுதாக இருப்பதாக மக்களை நம்ப வைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவையும் ஏமாற்ற வேண்டும். இதை சரியாக செய்திருக்கிறது கொள்ளை கும்பல்..

அதிகாலை 2 மணி: அதிகாலை 2 மணியை பொறுத்தவரை நாயும் உறங்கும் நேரம் என்று சொல்வார்கள்., அந்த அளவிற்கு மயான அமைதி நிலவும். அந்த சமயத்தில் தான் திருட்டு சம்பவத்தை அரகேற்ற முடிவு செய்துள்ளனர். பொதுவாக ஏடிஎம்களில் அதிக பணம் இருக்கும் ஏஎடிம்களை தான் கொள்ளையர்கள் குறிவைப்பார்கள், அந்த வகையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலழி பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் அதிக பணம் இருப்பதை அறிந்து அதனை மேவாட் கொள்ளை கும்பல் திட்டமிட்டு குறிவைத்துள்ளனர். இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார்.
ஏடிஎம் பழுதுபார்க்கப்படுகிறது: அவர் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க, அதன் மீது 'ஸ்பிரே பெயிண்ட்' அடித்திருக்கிறார். பின்னர் "ஏடிஎம் பழுதுபார்க்கப்படுகிறது" என்று பேனரை தைரியமாக வைத்திருக்கிறார். அதன் பின்னர் முகமூடி அணிந்திருந்த 4 பேர் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கண் இமைக்கும் நேரத்தில் கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அருகே இருந்த ஏடிஎம் என மொத்தம் 3 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். வெறும் 10 நிமிடத்தில் ஒவ்வொரு ஏடிஎம்மிலும் கொள்ளை நடந்துள்ளது.
அலர்ட் செய்த போலீஸ்: இதனிடையே கொள்ளை நடந்த சம்பவம் மூன்று ஏடிஎம்களிலும் அதிகாலை ஐந்து மணி வரை போலீசுக்கு முழுமையாக தெரியவில்லை.. அதிகாலையில் 5 மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில் உஷார் அடைந்தனர். குற்றவாளிகள் தப்பி ஓடிய வாகனம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 'வெள்ளை நிற கிரெட்டா கார்' என்பதை கண்டுபிடித்த கேரள போலீசார் அதனை கேரளாவின் அனைத்து சோதனை சாவடியிலும் தெரிவித்து அலர்ட் செய்தனர்.

கன்டெய்னரில் கார்: ஆனால் செல்லும் வழியில் கொள்ளையர்கள், அந்த காரை கன்டெய்னரில் ஏற்றி கோவை வழியாக தப்பி செல்ல முடிவு செய்து பயணித்துள்ளார்கள். இதற்காக சென்னையில் துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு திருச்சூர் வந்திருக்கிறார்கள். போலீசார், வெள்ளை நிற கிரெட்டா காரை தேடிக்கொண்டிருக்க, கொள்ளையர்களோ, நாம் தப்பித்தோம் ஜாலி என்று நினைத்து கண்டெய்னரில் பயணித்துள்ளனர்.
பொதுவாகவே மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் எந்த வாகனம் வந்தாலும் போலீசார் சோதிப்பது வழக்கம். அந்த வகையில் கேரள தமிழக எல்லையான வாளையார் செக்போஸ்டில் சோதித்தனர். அப்போது ஒரு கண்டெய்னர் நிற்காமல் சந்தேகத்திற்கிடமாக வேகமாக சென்றது. அந்த கண்டெய்னர் லாரி குறித்து கேரள போலீசார், தமிழக போலீசாரை எச்சரிக்கை செய்தனர்.

பொதுவாக ஈரோட்டை கடந்து சென்றால் காவிரி பாலம் வரும். அதை கடந்து தான் யாராக இருந்தாலும் செல்ல வேண்டும். இதனிடையே கேரள எல்லையில் நிறுத்தாமல் அதிவேமாக சென்ற அந்த கன்டெய்னர் லாரி பள்ளிப்பாளையம் வழியாக தப்பி செல்வது தெரியவந்தது. இந்த தகவல் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணனுக்கு கேரள போலீசார் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் நேற்று காலையில் தனிப்படை போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பைபாஸ் அருகில் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள்.
காலை 8.45 மணியளவில் அந்த வழியாக வந்த கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரியை நிறுத்தும்படி நாமக்கல் போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. அத்துடன் சாலையோரம் இருந்த 2 மோட்டார் சைக்கிள், கார் உள்பட 3 வாகனங்களை இடித்து தள்ளியபடி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்லை எடுத்து வீசினார்கள். இதில் லாரியின் கண்ணாடி உடைந்தது.

எனினும் அதிவேகமாக சென்ற லாரி, சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடி வரை சென்றது. பின்னர் அந்த கன்டெய்னர் லாரி மீண்டும் அதே சாலையில் திரும்பி வந்து வெப்படை நோக்கி செல்ல தொடங்கியது. இதனால் போலீசார் அந்த லாரியை சினிமாவில் வருவது போல ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீஸ் ஜீப் மீதும் மோதி அச்சுறுத்தி உள்ளார்கள். எனினும் போலீசார் விடாமல் சேசிங் செய்தனர். இறுதியாக சங்ககிரி-பள்ளிபாளையம் சாலையில் சன்னியாசிபட்டி பகுதியில் அந்த கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கினர்.

அதில் கன்டெய்னர் லாரி கேபினில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் ஜூமானுதீன் (வயது 40) உள்பட 5 கொள்ளையர்கள் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். கன்டெய்னர் லாரியை ஏற்கனவே ஓட்டி வந்த கொள்ளையன் ஜூமானுதீன் வெப்படை போலீஸ் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டி சென்று கொண்டு வந்தான்.
தோப்புக்காடு அருகே சென்றபோது கன்டெய்னர் லாரியின் பின்புறம் இருந்து திடீரென பயங்கர சத்தம் வந்தது. எனவே போலீசார் வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டனர். பின்னர் ஜூமானுதீனை கன்டெய்னரை திறக்க சொல்லி உள்ளார்கள். திறந்து விட்ட அவன், திடீரென குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியை தாக்கி விட்டு ஓடியுள்ளான். அவனுடன் கன்டெய்னரில் இருந்து பணப்பையுடன் குதித்த மற்றொரு கொள்ளையனும் ஓட்டம் பிடித்துள்ளான். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் இருவரையும் துரத்தி சென்றனர்.

அப்போது அங்குள்ள ஓடை அருகே சென்றபோது ஜூமானுதீன் வழுக்கி கீழே விழுந்தான். அவனை மல்லசமுத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் ஜூமானுதீன் அருகில் கிடந்த கல்லை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆவேசமாக தாக்கினான். எனவே இன்ஸ்பெக்டர் தவமணி, தற்காப்புக்காக ஜூமானுதீனை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் ஜூமானுதீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இதனிடையே பணப்பையுடன் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் அசார் அலி (28) என்பவனும், போலீசாரை கல்லால் தாக்க முயன்று உள்ளான்.

எனவே அவன் தப்பிவிடாமல் இருக்க, அவனையும் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இறுதியில் பணத்துடன் கொள்ளையனை பிடித்தனர். இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கொள்ளையன் அசார் அலிக்கு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கொள்ளையன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இதற்கிடையே கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரியில் இருந்த மற்றொரு கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். பின்னர் கன்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது அதில் போலீஸ் தேடிய கார் இருந்தது. மேலும் கொள்ளையன் கையில் இருந்த பையில் சுமார் ரூ.65 லட்சம் ரொக்க பணம் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த இர்பான், ஷபீர்கான், சவுகீன், முகமது இக்ரம், முபரிக் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சூர் போலீசாரும் வெப்படை வந்து, கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் கடப்பாவில் கடந்த வாரம் இந்த கொள்ளை கும்பல் தான் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அவர்களும் நாமக்கல் வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் தென் இந்தியாவில் குறைந்தது 15 ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications