பிரதமர் திறந்து வைத்த கோவை மேம்பாலத்திலேயே ஊழலா.. களமிறங்கிய ஐஏஎஸ் அதிகாரி.. சூடுபிடிக்கும் விசாரணை
கோவை: கோவையில் எல்லா பகுதிகளிலும் சாலை இருக்கிறதோ இல்லையோ ஆனால் மேம்பாலங்கள் இல்லாத பகுதி குறைவு. மேம்பாலங்கள் அதிகம் இருக்கும் அதேநேரத்தில் அதுதொடர்பான சர்ச்சைகள், புகார்களும் அதிகம் உள்ளன. பெரியநாயக்கன் பாளையத்தில் ரூ.115 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டியது. மேடு, பள்ளமான சாலை, மழை பெய்தால் குளம் போல தேங்கும் நீர் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளதால் இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை தொடங்கியிருப்பது அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மிகவும் மந்தமாக பணிகள் நடந்த நிலையில், ஒருவழியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்
மேடு பள்ளமான சாலை, குளம் போல தேங்கும் தண்ணீர், முறையற்ற திட்டமிடல் ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடங்கி, ஜோதிபுரம் பகுதியில் பாலம் இறங்கும் இடத்தில் பாலத்தை ஒட்டியே ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு கட்டிடம் உள்ளது. அதை அகற்றிவிட்டு பாலத்தை கட்டியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அப்பகுதி மிகவும் குறுகலாக உள்ளது.
முக்கியமாக பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சர்வீஸ் சாலையும், பாலம் இறங்கும் இடமும் ஒரே இடத்தில் இணைகிறது. இது விபத்து அபாயம் கொண்டது. மேலும் பாலத்தில் மழைநீர் செல்ல எந்த வழியும் இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலே மேம்பாலத்தின் மேல் பகுதியில் குளம்போல தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேம்பாலத்தில் விளக்குகள்கூட அமைக்கவில்லை.
ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
இந்த மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் புகார் எழுந்தது. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இந்திய சாலை காங்கிரஸ் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்மதியோன் என்பவர் பிரதமர் அலுவலத்தில் புகார் அனுப்பினார். நாட்டின் பிரதமர் திறந்து வைத்த மேம்பாலத்தின் நிலை இதுதான் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்தப் புகாரை சீரியஸாக எடுத்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் தொடர்பாக ஒரு ஐஎஸ்ஏ அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், சாலைகள் திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன் என்கிற ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளது.
அதிகாரிகளுக்கு தண்டனை
அவர் விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அடுத்த 45 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்காமல் மேம்பாலம் கட்டியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பிரிவு 12 (பி) பிரிவில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதவி இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications