"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக்
கோவை: பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று மேலிடத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவரை தேர்தலில் களமிறக்க பாஜக மேலிடம் முயன்று வருகிறது. இந்நிலையில் தான் கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பூத்தில், பூத் ஏஜென்ட்டாக பணியாற்ற உள்ளதாக அவர் கூறிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. இதன்மூலம் அவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 27 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் களமிறங்க அண்ணாமலை நினைத்தார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த தொகுதிகளை வழங்கவில்லை. கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு, அதிமுக வழங்கி உள்ளது. அதிலும் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.
அண்ணாமலை பிடிவாதம்
இதனால், அண்ணாமலை அதிருப்தியடைந்துள்ளார். விரும்பி தொகுதி கிடைக்காமல் போனதே அவரது அதிருப்திக்கு காரணம். இதனால் வரும் சட்சபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவரை பாஜக மேலிடம் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறக்க நினைக்கிறது.
அண்ணாமலையோ கோவை மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கினால் களமிறங்குகிறேன். இல்லாவிட்டால் போட்டியிடாமல் கட்சி தொண்டனாக பணியாற்றுகிறேன் என்று மேலிடத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்கள்
இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது அவர்கள் அண்ணாமலையின் ஆதரவை கோரினார்.
அப்போது அண்ணாமலை கண்வைத்து மிஸ்ஸான கவுண்டம்பாளையம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான அருண்குமார், மேட்டுப்பளையம் வேட்பாளர் சின்னராஜ் கிணத்துகடவு வேட்பாளர் தாமோதரன், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமி, கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டவர்கள் அண்ணாமலையை சந்தித்தனர்.
பிஎல்ஏ-வாக விரும்பும் அண்ணாமலை
இந்த சமயத்தில் கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருண் குமார், அண்ணாமலையிடம் ஆதரவு கோரினார். அப்போது அண்ணாமலை ''தேர்தல் நாளான 23ம் தேதி காலையில் நான் ஓட்டுப்போட்டு விட்டு பாஜகவின் பிஎல்ஏவாக (பூத் லெவல் ஏஜென்ட்டாக) பணியற்றுவேன்.
அண்ணணுக்காக முழு வேலையை செய்துவிட்டு மாலையில் வருவேன். அப்புறம் நீங்கள் ஆதரவு கேட்டு வந்தால் எப்படி?'' என்றார். அதாவது அண்ணாமலையிடம் அருண்குமார் ஆதரவு கோரிய நிலையில் நான் ஏற்கனவே உங்களின் தேர்தல் வெற்றிக்காக பணியாற்ற முடிவு செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வார்த்தையின் அர்த்தம்
பொதுவாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவோர் பூத் லெவல் ஏஜென்ட்டாக பணியாற்றமாட்டார். தேர்தல் நேரத்தில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் வலம் வருவார். ஆனால் அண்ணாமலையோ கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பூத்தில், பூத் லெவல் ஏஜென்ட்டாக பணியாற்ற தயாராகி வருகிறார். இந்த வார்த்தைகள் வழியாக அண்ணாமலை, தான் நிச்சயம் தேர்தலில் போட்டியிடமாட்டேன். என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற மெசேஜை பாஜக மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்.
பாஜக மேலிடத்துக்கு புது தலைவலி
கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி மட்டும் தான் என்பதால் அண்ணாமலையை மொடக்குறிச்சி அல்லது வேறு தொகுதியில் களமிறங்கும்படி பாஜக மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அண்ணாமலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையே தான் பூத் லெவல் ஏஜென்ட்டாக பணியாற்ற இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது அண்ணாமலையின் பிடிவாதத்தை காட்டுவதால் பாஜக மேலிடம் புது தலைவலி ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது வரை பாஜக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை அறிய நாம் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications