நான் சில ரகசியங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி திகாருக்கு போய் விடுவார்.. அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்!
கோவை: நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஓபிஎஸ் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கோவையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று, பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு' என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் ஓபிஎஸ் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து நாளை காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்திலும் நடக்கும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் சூலூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பில் இருந்தார். அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வர முடியாது என்ற விதியை மாற்றி, கட்சிக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வராக்கிய சசிகலாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள் இந்த நம்பிக்கை துரோகிகள்.
ஜெயலலிதா இறந்த பிறகு டிடிவி தினகரன், 36 எம்எல்ஏக்களுடன் தனியே பிரிந்து, ஆளும் அதிமுகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அப்போது என்னிடம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டதன் பேரில் நான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அன்றைக்கு நான் ஆதரவு கொடுக்காமல் டிடிவி.தினகரன் பக்கம் நின்று இருந்தால், ஆட்சி அப்போதே கைமாறி இருக்கும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரைக்காக தேனி தொகுதிக்கு மட்டும்தான் பிரதமர் மோடி வந்தார். அந்த தொகுதியில் வென்ற ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க நினைத்த போது, எரிச்சலான எடப்பாடி பழனிசாமி நேராக டெல்லிக்கு சென்று அதை தடுத்து நிறுத்தினார். அதிமுகவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆகக்கூடாது என தடுத்து நிறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது அரசை காப்பாற்றிய எங்களுக்கு அவர் செய்யும் நன்றி இதுதான்.
நன்றி மறந்த நபரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பதவியும், இரட்டை இலை சின்னமும் தற்காலிகமாகத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தொண்டர்களும், மக்களும் நம் பக்கம் தான் உள்ளார்கள். அதிமுகவை மீண்டும் கைப்பற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் ஒப்படைப்பதே எனது நன்றிக்கடனாக இருக்கும். அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்காகத்தான் பன்னீர் செல்வம் அரசியல் கடமை ஆற்றுவானே ஒழிய, தனிக்கட்சி தொடங்க நான் எந்நாளும் நினைக்க மாட்டேன்.
ஒரு தடவைதான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள், என்னென்ன பாடுபடுத்தினார். இரண்டு முறை அம்மா எனக்கு முதல்வர் பதவியை தந்தபோதும் அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டேன். மூன்றாவது முறையாக சசிகலா, எனக்கு முதலமைச்சர் பதவி தரும்போதும் நான் அதை திரும்பக் கொடுத்துவிட்டேன். என்னுடைய பணி நிறைவாக உள்ளது. அதனால் என்னை யாரும் நம்பிக்கை துரோகி என சொல்ல முடியாது.
முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் கையெழுத்து போட்டுத்தான் ஃபைல்கள் அனைத்தும் போகும். நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன்" என ஓபிஎஸ் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications