முதல்முறை மட்டும்தான் வார்னிங்.. அப்புறம் ஆக்ஷன் தான்.. எச்சரிக்கை விடுத்த கோவை போலீஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்கி வருகிறது கோவை மாவட்டம். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவையில் கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழில் என்று அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டமாக உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பல மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் பிரதான பிரச்னையாக இருப்பது போக்குவத்து நெரிசல். இதன் காரணமாக சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாநகர போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் ஹெல்மெட் அணிந்திருப்பதை கல்லூரி நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். முறைய ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு காவல் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பாலம் கட்டுதல், ஒரு வழிப் பாதை அமைத்தல், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகர போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இயக்குவது, குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது, செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் பல பகுதிகளில் வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 941 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 901 வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதம் கட்டிய பின்னர் அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒன்றுக்கும் அதிக முறையில் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து 10.1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications