புல்லட்டில் திமுக கொடி.. கழுத்தில் கட்சி துண்டு.. திமுகவுக்கு வாக்கு கேட்கும் ருமானிய நாட்டுக்காரர்!
கோவை: தொழில் நிமித்தமாக இந்தியாவுக்கு வந்த ருமானியா நாட்டுக்காரர் திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.
இதன் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதற்காக வேட்பாளர்களும் கட்சி தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ருமானியா நாட்டுக்காரர்
இந்த நிலையில் கோவையில் ருமானியா நாட்டை சேர்ந்த ஒருவர் உதயசூரியன் சின்னம் வைக்கப்பட்ட புல்லட் வாகனத்தில் வந்தார். அவரது பின்னால் இளைஞர் ஒருவர் திமுக கொடி பிடித்துக் கொண்டு வந்தார். வாகனத்தை விட்டு இறங்கிய ருமானியா நாட்டுக்காரர் கழுத்தில் திமுக கழக துண்டை அணிந்திருந்தார்.

துண்டு பிரசுரம்
பின்னர் அங்கிருந்தவர்களுக்கு திமுகவுக்கு வாக்கு அளிக்கக் கோரும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவரது பெயர் ஸ்ரீஃபன் நெகொய்டா. இவர் ருமானியாவிலிருந்து இந்தியாவுக்கு தொழில் நிமித்தமாக வந்துள்ளார். பின்னர் அங்கு வந்த பேருந்தில் ஏறிய ஸ்ரீஃபன், அங்குள்ள பயணிகளுக்கும் துண்டு பிரச்சாரத்தை கொடுத்தார்.

பிரச்சாரம்
வெள்ளைக்காரர் ஒருவர் திமுக கட்சி துண்டை அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்ததை பார்த்து மக்கள் வியந்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது அவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். கோவையில் தங்கியிருந்த போது இலவச பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்பதை அறிந்தார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
இது குறித்து அவருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரித்த போதுதான் அது முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்பது தெரியவந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திட்டத்தால் கவரப்பட்ட அவர் தற்போது நடைபெறும் நகர்ப்புற தேர்தல் குறித்தும் அறிந்தார். இதையடுத்து திமுகவினர் சிலரை சந்தித்து முதல்வர் ஸ்டாலினுக்காக தானும் பிரச்சாரம் செய்வதாக கேட்டார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் திட்டங்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் முன்மாதிரியாக இருப்பதாக அவரது கட்சியினர் சொல்லி வரும் நிலையில் தற்போது வெளிநாட்டினரே இந்த திட்டத்தை பாராட்டியிருப்பதால் மகிழ்ச்சியாக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications