கோவையில் நரபலியா?.. இருகூர் தண்டவாளத்தில் 1 1/2 வயது குழந்தையின் சடலம்.. போலீஸ் விசாரணை
சென்னை: கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தையின் சடலம் கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் குழந்தையின் உடலைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டவாளத்தில் குழந்தை சடலம்
கோவை மாவட்டம், இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளம் ஒன்று உள்ளது. இந்த தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு தண்டவாளத்தில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை சடலமாகக் கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.

நரபலியா?...
காவல் துறையினர் உடனடியாக அந்தக் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது குழந்தையின் உடலின் அருகே மஞ்சள், குங்குமம், ரத்தம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ஆகியவை கிடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியுள்ளது.
மோப்பநாய்
ஒன்றரை வயது குழந்தையை குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரயிலில் இருந்து தவறிய குழந்தை?
சோதனை மேற்கொண்ட மோப்ப நாய் குழந்தையின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய பின்னர் நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ஒன்றரை வயது குழந்தை தண்டவாளத்தில் உயிரிழந்தது கிடப்பது எப்படி என்பது தெரியவில்லை. ரயிலில் சென்றபோது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில், நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கான வாய்ப்பும் இந்தப் பகுதியில் இல்லை. குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications