"எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா" வால்பாறை போறீங்களா..கேரள அரசு சொன்ன மிக மகிழ்ச்சியான செய்தி
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை முதல் கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அதிரப்பள்ளியை நோக்கிய சாலை திறக்கப்பட்டுள்ளது. உண்மையில் 96 ராம் போல் சுற்றும் பலருக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. வால்பாறை அதிரப்பள்ளி சாலை திறப்பு தமிழக, கேரளா மாநில சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு உண்மையிலேயே சொர்க்கம் என்றால் இந்த இரண்டு மாதங்கள் தான். மார்ச் மாதமே சீசன் களை கட்ட தொடங்கிவிடும் என்றாலும், ஏப்ரல் 14 ம் தேதி முதல் ஜூன் மாதம் முடியும் வரையிலுமே மலைவாசல் தளங்களுக்கு மக்கள் அதிக அளவில் படையெடுப்பார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் காங்ரீட் காடுகளில் வசிக்கும் மக்கள், இயற்கையை ரசிக்க விரும்பி கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி, மேகமலை, வால்பாறை போன்ற சுற்றுலா தளங்களுக்கு மக்கள் படை எடுக்கிறார்கள்.

மேலே சொன்ன எல்லா சுற்றுலாதளங்களுக்கும் தனிச்சிறப்புகள் உள்ளன. குறிப்பாக கோவை மாவட்டத்தின் சுற்றுலாதலமான வால்பாறையை பற்றி சொல்ல வேண்டுமானால், இது தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
புல்வெளி, பள்ளத் தாக்குகள், நீர்வீழ்ச்சிகளால் வால்பாறை ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அழகை கண்டு ரசிக்க, தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும்சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள கேரளா மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வார்கள். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வரும் கேரள சுற்றுலா பயணிகளும் வால்பாறை வருவார்கள்.
இந்நிலையில் கேரளா மாநிலம் மளுக்குபாறையிலிருந்து, அதிரப்பள்ளி, ஆனைக்காயம் வரை ரூ.21 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி நடந்தது வந்தது. இந்த பணி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இதனால் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் கடந்த 4-ம் தேதி வரை அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இதனிடையே அதிரப்பள்ளி முதல்ஆனைக்காயம் வரை சாலை மேம்படுத்தும் பணி நிறைவடையாத நிலையே இருந்தது,. கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் நலன் கருதி வழக்கம் போல வாகனங்கள் செல்ல கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் வால்பாறை - சாலக்குடி வழித்தடத்தில் 23 நாட்களுக்கு பின்னர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இருமாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications