கோவையில் பாஜக நடத்திய போராட்டம்.. மாவட்ட கலெக்டர் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
கோவை: வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பலர் வாக்களிக்க முடியவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்தும், மீண்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வாக்களிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள், பா.ஜனதா நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்காளர் பட்டியல் சர்ச்சை குறித்து கோவை கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:" 2024-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலானது கடந்த 27.10.2023 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆய்வுக் கூட்டம், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார்வையாளர் தலைமையில் கடந்த 24.11.2023 அன்று நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், ஏற்கனவே 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள் குறித்த ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை.
2024-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலானது கடந்த 22.01.2024- அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மேற்படி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16,71,003 ஆகும். இதுதொடர்பாக ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை. பொதுமக்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
நடப்பு மக்களவைப் பொதுத் தேர்தல், 2024-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 27.03.2024-ம் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை, அதாவது 22.01.2024 முதல் 17.03.2024 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இணைய வழியாகவும், மேற்படி படிவங்களை நேரடியாகப் பூர்த்தி செய்து வழங்கிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
27.03.2024 அன்று வெளியிடப்பட்ட தொடர் திருத்த வாக்காளர் பட்டியலில், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 17,08,369 ஆகும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3,97,755 உடன் சேர்த்து, கோவை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21,06,124 ஆகும். இதுதொடர்பாக வாக்காளர்களுக்கு ஹெல்ப்லைன், இணையவழி உள்ளிட்டவை மூலமாகவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications