கோவையில் பூச்சி இருப்பதாக சண்டை.. பதிலுக்கு 10 பிரியாணி வாங்கிய ஐடி ஊழியர்கள்.. கடைசியில் ட்விஸ்ட்
கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கோவை சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றனர். பின்னர் கடைக்கு தேடி வந்த அவர்கள், பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டார்களாம். அத்துடன் அந்த பிரியாணிக்கு பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கினாராம். அதன் பின்னர் ஆம்லேட்டுக்காக தகராறு செய்து ஓட்டல் உரிமையாளரை தாக்கினார்களாம். அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரை பொறுத்தவரை ஓட்டல்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிக மிக அதிக அளவில் உயர்ந்துவிட்டது. கோவையில் எங்கு திரும்பினாலும், ஒவ்வொரு கார்னர் பகுதியிலும் ஓட்டல்கள் அதிகமாக இருக்கின்றன. தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் கோவையில் ஹோட்டல் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சிலர் ஓட்டல்களில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

அதே போல் ஓட்டல்களில் சிலர் சால்னா கூடுதலாக வாங்கவும், ஓசியில் பிரியாணி வாங்கவும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேநேரம் ஓட்டல்களில் சில நேரம் பிரியாணியில் பூச்சி இருப்பதாகவும், புழு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ராமச்சந்திரன் என்பவர் கோவை கணபதியில் தங்கி இருந்து சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் நண்பர்களுடன் வந்த அந்த இளைஞர்கள் பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது அந்த பிரியாணிக்கு பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சிக்கன், ஆம்லெட் உள்ளிட்டவைகளை தரும்படி கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் ராமச்சந்திரன் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராமச்சந்திரனையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்களாம்.
இந்த சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சக்திவேல் (23), கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த பஹீம் அகமத் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் துடியலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications