"238 தோல்விகள்!" ஆனாலும் தொடர்ந்து போட்டியிடுவது ஏன்! உண்மையை போட்டு உடைத்த தேர்தல் மன்னன் பத்மராஜன்
கோவை: தொடர்ச்சியாக சுமார் 230 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ள தேர்தல் மன்னன் பத்மராஜன் எதற்காகத் தான் இத்தனை தேர்தல்களில் போட்டியிடுகிறார் என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்,
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

தேர்தலில் போட்டியிட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றிக்குப் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் தோல்வி வேண்டும் என்பதற்காகப் போராடி வருகிறார். யார் அவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல்: தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருபவர் தான் கே. பத்மராஜன். இவரைத் தேர்தல் மன்னன் பத்மராஜன் என்றும் கூட உழைப்பார்கள். இவர் இதுவரை 238 முறை தோல்வியடைந்த போதிலும், இப்போது மீண்டும் அவர் லோக்சபா தேர்தலில் களமிறங்கத் தயாராகிவிட்டார். இந்த முறை லோக்சபா தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார்.
"தேர்தல் மன்னன்" பத்மராஜன், உள்ளாட்சித் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் அவரை நாடு முழுவதும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக அவர் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
யார் இவர்: 65 வயதான பத்மராஜன் கடந்த 1988ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான மேட்டூரில் தான் முதலில் போட்டியிட்டார். ஜனநாயக நாட்டில் தேர்தலில் சாதாரண மனிதனாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டவே அவர் தேர்தலில் போட்டியிட்டாராம். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றியைத் தேடுகிறார்கள். ஆனால் எனக்கு வெற்றி தேவையில்லை. என்னைப் பொறுத்தவரைத் தேர்தலில் போட்டியிடுவதே வெற்றி தான். தேர்தலில் தோல்வியடைவதும் மகிழ்ச்சி தான்.
வெற்றி என்பது எனக்கு இரண்டாம்பட்சம். எனக்கு எதிராக யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. வரும் தேர்தல்களிலும் தோல்வியடைய வேண்டும் என்பதே எனது தற்போதைய நோக்கம். 30 ஆண்டுகளாக நான் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இதற்காக நான் டெபாசிட் தொகைக்காகவே பல லட்சம் ரூபாயைச் செலவழித்து இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
உண்மையில் என்ன காரணம்: தொடர்ச்சியாக ஏகப்பட்ட தேர்தல்களில் தோல்வியடைந்த இவர் இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேட்டூர் சட்டசபைத் தேர்தலில் தான் இவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த முறை அவர் சுமார் 6,273 வாக்குகளைப் பெற்றிருந்தார்.. இதுவே அதிகம் என்றால் அவர் மற்ற தேர்தல்களில் பெற்ற வாக்குகள் என்னவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
அவர் மேலும் கூறுகையில், "நான் எந்தத் தேர்தலிலும் ஒரு வாக்கைக் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனது வேலையை விட நான் தேர்தலில் போட்டியிடுவது தான் எனக்கு மிக முக்கியமானது.. இளைஞர்கள் பலருக்கும் அரசியலில் ஆர்வம் இருந்தாலும் அவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தயங்குகிறார்கள். எனவே விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் ஒரு ரோல்மாடலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications