கோவை சரவணம்பட்டி ஐடி பார்க்கில் புகுந்த காட்டு யானைகள், குட்டையில் குட்டிகளுடன் ஜாலியாக கும்மாளம்
கோவை: கோயம்புத்தூர் மாநகரை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள், புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் வருவது வழக்கம். ஆனால் கோவை மாநகருக்குள்ளே குட்டியுடன் 2 காட்டுயானைகள் புகுந்திருக்கின்றன. வனப்பகுதியில் இருந்து 20கிலோ மிட்டர் தள்ளி உள்ள சரவணம்பட்டி அருகில் உள்ள கீரநத்தம் பகுதிக்கு நேற்று வந்தன. அங்குள்ள குட்டையில் ஜாலியாக குளித்தன.
கோவை மாநகத்தை பொறுத்தவரை மதுக்கரை தொடங்கி அப்படியே வளைந்து மேட்டுப்பாளையம் வரை மேற்குதொடர்ச்சி மலை நேராக செல்கிறது. அதன்பிறகு சற்று வளைந்து நீலகிரி மாவட்டம் வழியாக கேரளா மற்றும் கர்நாடாகவிற்குள் நுழைந்து மகாராஷ்டிராவில் மேற்கு தொடர்ச்சி மலை முடிகிறது. இதில் மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை மலை அடிவாரப்பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள ஏராளமான காட்டுயானைகள் அவ்வப்போது மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் ஒரு குட்டியுடன் 2 காட்டுயானைகள் வெளியேறி இருக்கிறது. அந்த யானைகள் கதிர்நாயக்கன்பாளையம், துடியலூர் வழியாக கவுசிகா நதியை அடைந்திருக்கின்றன. அவை தண்ணீர் தேடி அந்த நதி வழியாகவே சென்ற நிலையில், கோவை மாநகரத்தின் சரவணம்பட்டி அருகே கீரணத்தத்தில் ஐ.டி. பார்க் பின்புறத்தில் உள்ள நல்லூர் சாமியப்பர் குட்டைக்கு வந்துவிட்டன.
அந்த குட்டையில் தான் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதையடுத்து அந்த யானைகள் குட்டியுடன் உலா வந்தன. அந்த தண்ணீரில் ஜாலியாக குளித்தன. வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்தை தாண்டி, தண்ணீர் தேடி சுமார் 20 கிமீ பயணித்து கீரணத்தம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே யானைகளை பார்க்க அந்த குட்டை அருகே திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.அதன்பிறகு அவர்கள் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர்.
அதேநேரம் யானைகள் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கவில்லை. பகல் நேரத்தில் யானைகளை துரத்தும்போது அவை ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால், காட்டு யானைகளை வனத்துறையினர் பகலில் துரத்தவில்லை . நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகளை வனப்பகுதிக்கு வனத்துறையினர் துரத்திவிட்டனர். அண்மையில் காட்டுப்பூனை சூலூர் அருகே உலாவியது. அதனை பலர் சிறுத்தை என்று தவறாக நினைத்துக்கொண்டனர். தற்போது யானை கோவை மாநகருக்குள்ளேயே வந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications