அப்பாவி போல நிற்கும் இவர்தான்.. கடலூர் கொலை.. மக்களோடு நின்று வேடிக்கை பார்த்த முக்கிய குற்றவாளி!
கடலூர்: கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஷாகுல் ஹமீது, போலீசார் விசாரணையின் போது கொலை நடந்த இடத்தில் மக்களோடு மக்களாக அப்பாவி போல் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி (65), சுமந்த் குமார் (40) மற்றும் சுமந்த் குமாரின் மகன் நிஷாந்த் (10) ஆகிய மூன்று பேரும் கடந்த ஜூலை 14ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, 7 தனிப்படைகளை அமைத்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தீவிர விசாரணை மேற்கொண்டார். எனினும், போலீசாருக்கு எந்தவொரு பிடியும் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் சிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரின் வீட்டுச் சுவரில் ரத்தக்கறை இருந்ததால் அவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். ரத்த மாதிரிகளையும் சோதனைக்கு அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், சங்கர் ஆனந்த் என்பவரை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர் அவரை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது, அவருடன் ஷாகுல் ஹமீது என்பவரும் இணைந்து இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சங்கர் ஆனந்தின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணம் சுமந்த்குமார் தான் எனவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தன்னை, கமலேஸ்வரி அனாதை என திட்டியதால் ஆத்திரத்தில் 12 ஆம் தேதி நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டில் இருந்த 3 பேரையும் வெட்டிக் கொலை செய்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தனது விரல் துண்டானதாகவும் சங்கர் ஆனந்த் கூறியுள்ளார்.
மீண்டும் கடந்த ஜூலை 14ஆம் தேதி காலையில் தனது நண்பனான ஷாகுல் ஹமீதுடன் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று அங்கு இறந்த நிலையில் கிடந்த உடல்களில் பெட்ரோல் மற்றும் ஆசிட் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதாகவும் சங்கர் ஆனந்த் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக சங்கர் ஆனந்த் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு கை விரலை இழந்த சங்கர் ஆனந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், இருவரையும் கடலூர் ஜே.எம். -1 நீதிமன்ற நீதிபதி வனஜா முன்பு ஆஜர்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சங்கர் ஆனந்த் மற்றும் ஷாகுல் ஹமீது இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லிக்குப்பம் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சுமந்த்குமார் வீட்டிற்கு எதிரில், இச்சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். அப்போது, கொலைக் குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள ஷாகுல் ஹமீது, அப்பாவி போல நிற்கும் காட்சி வெளியாகியுள்ளது.
3 பேரை எரிப்பதற்கு சங்கர் ஆனந்துக்கு துணை புரிந்த ஷாகுல் ஹமீது, கொலைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் மக்களோடு மக்களாக நின்று வேடிக்கை பார்க்கும் இந்த வீடியோ தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications