'வாங்க பைட் பண்ணி பார்ப்போம்'.. திருமாவளவனுக்கு ஹெச்.ராஜா சவால்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, திருமாவளவன் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என ஹெச் ராஜா சவால் விடுத்துள்ளார்.
கடலூர்: தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, திருமாவளவன் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநில கட்சி கூட இல்லை. அது மாவட்ட கட்சி. ஊர் குருவி எவ்வளவு தான் பறந்தாலும் அது பருந்தாக முடியாது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக விஷம் கக்குவதற்கு காரணம் என்ன?
இன்று அலைஅலையாக பட்டியல் சமுதாய மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனை எச்சரிக்க விரும்புகிறேன். 24 மணிநேரத்தில் நீங்களே சொன்னபடி எம்பி ராஜினாமா பண்ணணும். வாங்க பைட் பண்ணி பார்ப்போம்.. எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு விவாதம் நடத்த திருமாவளவன் தயாரா?" இவ்வாறு ஹெச் ராஜா பேசினார்.

சாதிக்கள்
நேற்று சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பாஜக குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். பாஜக ஒரு மதம் சார்ந்து இயங்குவதாகவும், சாதிக்கள் அனைத்துத் தனித்தனியாக பிரிந்து இருக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள் என்றும், மத ரீதியாக அரசை அமைப்பதே அவர்களின் இலக்கு என்றும் பேசினார்.

சிறந்த நடிகர்
மேலும் திருமாவளவன் பேசும் போது, "அரசியல்வாதிகளிலேயே மிகச்சிறந்த நடிகர் விருது கொடுக்கலாம் என்றால், உலக அளவில் அந்த விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்கலாம். ஏனெனில் அப்படி பேசிக்காட்டக்கூடிய, மக்களிடம் நடித்துக்காட்டக்கூடிய மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி. முன்பு கலைஞர் எம்ஜிஆரைத்தான் எத்தன் மகாதிலகம் என்பார். இப்போது எத்தன் மகாதிலகம் என்றால் அது நரேந்திர மோடி. நல்லவரை போல் நடித்துக்காட்டக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் மோடி. நீங்கள் வரலாற்றை பார்த்தால் எல்லா இடங்களில் பாஜக சமூக பதற்றத்தை உருவாக்குவதையே யுக்தியாக கையாள்கிறார்கள்.

என்ன சொன்னார்
தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டார்கள். கலைஞர் இருந்தவரை வாலாட்டவில்லை. ஜெயலலிதா அம்மாவையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூர்ந்துதான் ஆக வேண்டும். 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிந்த ஜெயலலிதா, ஒரு கட்டத்திற்கு மேல்,பிரதமர் மோடியை விட்டுவிட்டார், மோடியை கடுமையாக சாடிப்பேசினார். மோடியா லேடியா மோதிப்பார்க்கலாம் வா என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா கூறும் போது, என் வாழ்நாளில் ஒரு தவறு இழைத்துவிட்டேன், ஒரு குற்றம் இழைத்துவிட்டேன். அதை ஒப்புக்கொள்கிற துணிச்சல் எனக்கு இருக்கிறது. அதற்காக வருந்துகிறேன். அந்த குற்றத்தை இழைத்தற்கு பரிகாரமாகத்தான், 13 மாதங்களில் நான் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தேன். இனி எந்த காலத்திலும் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொள்ளவே வைத்துக்கொள்ளாது என்று சொன்னவர் ஜெயலலிதா அம்மையார்.

சிபிஐ வழக்கு
எடப்பாடி அவர்கள் இதையெல்லாம் மறந்து போயிருப்பார். பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறார். ஒரு பெரும் சமூகத்திற்கு துரோகம் செய்கிறார். பெரும் கேட்டை கொண்டு வந்து இங்கு சிவப்பு கம்பளம் விரித்து கால் ஊன்றுவதற்கு வழிவகுக்கிறார். இது திமுகவிற்கு எதிரானதாக அவர் நினைக்கலாம். அல்லது தன் மீது சிபிஐ வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் தன்னை தற்காத்துக்கொள்ளலாம் பாஜகவை சுமக்கலாம். ஆனால் அப்படி செய்வது தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் துரோகம்.

கலைஞரைவிட ஆபத்தானவர்
அதிமுக இல்லாவிட்டால் பாஜகவினர் வாயையே திறக்கமாட்டார்கள். வாலாட்ட மாட்டார்கள். அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காலத்தில் பாஜகவினர் ஊடுருவி உள்ளனர். பயப்பட்டுவிடக்கூடிய சாதாரணமான கட்சி திமுக, தலைவர் தளபதி என்று கணக்கு போட்டு பார்க்கிறார்கள்.ஆனால் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் தளபதிக்கு உண்டு. அவர் அண்ணாவோடு இருந்திருக்கிறார். பெரியாரோடும் இருந்திருக்கிறார். கலைஞரின் மடியில் தவழ்ந்து அரசியல் கற்று இருக்கிறார். எல்லா உத்திகளும் கலைஞரிடம் இருந்து கற்றுக்கொண்டவர். அதனால் தான் ஹெச் ராஜா சொன்னார். கலைஞரை விட ஆபத்தானவர் நமது தளபதி என்று.. இதுதான் நற்சான்றிதழ், தளபதிக்கு தந்திருக்கிற சான்றிதழ்களிலேயே இந்த சனாதனவாதிகள் தருகின்ற சான்றுதான் சிறப்பானது. ஆபத்தானவர் தான், சனாதன சக்திகளுக்கு ஆபத்தானவர் தான். அதனால் தான் அவர் தனது பிறந்த நாளில் பேசிய உரை, இந்தியா முழுவதும் விவாதிக்ககூடியதாக மாறி இருக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் அதை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்" என திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications