கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன டேங்கர் வெடித்து விபத்து.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் கெமிக்கல் நிறுவனத்தில், ரசாயன டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அருகில் உள்ள குடியிருப்புகள், வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததில் அங்குள்ள மக்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அங்குள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடந்து வந்தது. அப்போது ஒரு டேங்கர் திடீரென வெடித்தது. சுமார் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் அதில் இருந்ததால், டேங்கர் வெடித்ததும் ரசாயன நீர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்ததால், அங்குள்ள மக்கள் அவதியடைந்தனர். மேலும் ஒரு சிலருக்கு கண் எரிச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், திடீரென ரசாயன டேங்கர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வீடுகளுக்குள் புகுந்த ரசாயன நீரால் நாங்கள் அவதி அடைந்து வருகிறோம் என்றும், குடியிருப்புக்குள் புகுந்த ரசாயன நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அங்குள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications