அமைச்சர் மகனுக்கு செக் வைக்கும் 2 கட்சிகள்! யார் கை ஓங்கும்? அரசியல் ஆடுபுலி ஆட்டம்!
கடலூர்: கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில் கடலூரை காங்கிரஸ் கட்சியும், வேல்முருகனின் த.வா.க.வும் கேட்டு குடைச்சல் கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கடலூர் ஒதுக்கப்பட்டால் மண்ணின் மைந்தரும், பிரபல தொழிலதிபருமான ஒருவருர் களம் காணக்கூடும் எனக் கூறப்படுகிறது. செலவை பற்றி அந்த தொழிலதிபர் கவலைக் கொள்ளாதவர் என்பது கூடுதல் தகவல். அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை பொறுத்தவரை தனது சொந்த அண்ணனை எம்.பி.யாக்கி டெல்லி அனுப்பி வைக்க விரும்புகிறார். இதனால் கடலூர் தொகுதிக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஒரு தொழிலதிபருக்கு திமுக எம்.பி.சீட் கொடுத்ததன் விளைவாக, கட்சித் தலைமை பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது. தற்போதைய கடலூர் சிட்டிங் எம்.பி. ரமேஷுக்கு மீண்டும் 100% சீட் கிடையாது என்பதால், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் தான் வேட்பாளர் என அவரது தரப்பு கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறது.
இந்நிலையில் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் கடலூர் தொகுதியை கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. மற்றொரு பக்கம் வெளிப்படையாகவே வேல்முருகனும் கடலூர் தொகுதியை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் கடலுர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பரிபூரண ஆசி அமைச்சர் மகன் கதிரவனுக்கு உண்டு என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தான் வேட்பாளர் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பொன்முடி மகனுக்கு இந்த முறை சீட் கிடையாது என்பதால் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் ஒரு தகவல் உலா வருகிறது. திமுக, காங்கிரஸ், த.வா.க. என யார் வேட்பாளரை நிறுத்தினாலும் அவர்களை தேர்தலில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என பாமக வியூகங்களை வகுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications