எங்க போனாரு.. ஆளை காணோம்.. கடலூரில் நடு இரவில் கொரோனா நோயாளியால் பதற்றம்.. கடைசியில் பார்த்தா..!
கடலூர்: தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைந்தாலும் தற்போது உள் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை இருக்கிறது.
இந்த நிலையில் கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவரால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. போலீஸ் தலையிட்டு தீர்க்கும் அளவிற்கு இந்த பிரச்சனை சென்றுள்ளது.

என்ன நடந்தது
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருந்த நபர் ஒருவர் நேற்று முதல்நாள் காணாமல் போனார். இரவு நேரத்தில் மருத்துவர் தினசரி செக்கப்பிற்கு சென்ற போது அந்த கொரோனா நோயாளி பெட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனை முழுக்க தேடி உள்ளனர்.

தேடல்
அவர் எங்குமே கிடைக்கவில்லை என்றதும் போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார் போல என்று நினைத்து போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு முழுக்க நபரை காணாததால் பெரிய பதற்றம் ஏற்பட்டது. எங்காவது ஓடி போய் விட்டாரா, இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுமே என்று பலர் பதற்றம் அடைந்தனர்.

குழப்பம்
அதிகாலையில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் குதித்த போலீஸ் நோயாளியின் விவரங்களை பெற்று நேராக அவரின் வீட்டுக்கு சென்றது. வீட்டிற்கு போனால் அங்கு நோயாளி ஹாயாக படுத்திருந்திருக்கிறார். இவரிடம் போலீஸ் விசாரித்ததில், நர்ஸ்கள்தான் தான் குணமடைந்துவிட்டதாக கூறி டிஸ்சார்ஜ் செய்ததாக தெரிவித்துள்ளார்.

டிஸ்சார்ஜ்
இதையடுத்து மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மருத்துவர்கள் வேறு ஒரு நபரை டிஸ்சார்ஜ் செய்ய சொன்னதற்கு இந்த நபரை மாற்றி டிஸ்சார்ஜ் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நபருக்கு ஒரே பெயர் என்பதால் குணமாகாத நபரை மாற்றி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இது தெரியாமல் இரவு ஷிப்டில் இருந்தவர்கள், அந்த நபரை தேடி அலைந்துள்ளனர்.

மீண்டும் சேர்ப்பு
இதையடுத்து வீட்டில் தங்கி இருந்த நபரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் குணமடைந்த அதே பெயர் கொண்ட நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிலர் கவனக்குறைவாக செயல்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் கடலூரில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications