தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தரும் சூப்பர் வாகனம்.. எப்படி பெறுவது? கடலூர் கலெக்டர் குட்நியூஸ்
கடலூர்: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டு முதல், 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற மூன்று சக்கர ஸ்கூட்டர் பழுதானால் புதிய வாகனம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், முடநீக்கு சாதனம், செயற்கை கால் செயற்கை கை, நவீன செயற்கை கால் போன்ற உபகரணங்கள் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதேபோல் பார்வையற்றோருக்கு பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்படுகிறது, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு காதுகேட்கும் கருவி வழங்கப்படுகிறது.

இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அரசு வழங்கி வருகிறது. இதேபோல் ஒரு கால் பாதிக்கப்பட்டு பணிக்கு செல்கின்ற மற்றும் சுயதொழில் செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிபந்தனையை தளர்த்தப்பட்டிருக்கிறது.கடந்த ஆண்டு மட்டும் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்து இருந்தால் திருமண நிதியுதவி ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் ரூ.25,000 மானியத்துடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற மூன்று சக்கர ஸ்கூட்டர் பழுதானால் புதிய வாகனம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டு முதல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர், மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருந்தால் புதிய மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கு மனுதாரரின் பெயரில் வாகனம் இருப்பதை உறுதி செய்திட பழைய வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் நகல், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கூட்டர் பெறப்பட்டதை மாற்றுத்திறனாளி அடையாள அட்டையில் பதியப்பட்ட பக்கத்தின் நகல் (அடையாள அட்டை முழுமையும்), ஓட்டுநர் உரிமத்தின் நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், ஒரு பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய வெள்ளைத்தாள் விண்ணப்பம் (தொலைபேசி எண்ணுடன்) ஆகியவற்றுடன் வருகிற 16-ந்தேதிக்குள் அறை எண் 112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு தபால் வழியாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications