காமராஜருக்கு 1000 அடியில் சிலை நிறுவ வேண்டும்.. நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த கன்னியாகுமரி எம்.பி!
டெல்லி: கன்னியாகுமரியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை நிறுவ வேண்டும் என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்றத்தின் 377 வது விதியின் கீழ் நேற்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விக்கண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.
இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருகச் செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள். மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.
மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும். இந்த சிலை அமைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.
1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜர், தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்டார். தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.












Click it and Unblock the Notifications