நான் ரூ 200 கோடிதான் வாங்குனேன்! இப்போ ரூ 217 கோடி தரேன்! என்னை விட்டுவிடுங்கள்! சுகேஷ் சந்திரசேகர்
டெல்லி: தொழிலதிபர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி அவர்களின் மனைவியரிடம் இருந்து ரூ 200 கோடி பறித்த வழக்கில் ரூ 217 கோடியை வழங்க தயாராக இருப்பதாகவும் தன்னை விடுவிக்குமாறும் திகார் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை மீட்டு தர தனக்கு டிடிவி தினகரன் ரூ 2 கோடி முன்பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த பணம் ஹவாலா பணம் என்ற சந்தேகத்தின் பேரில் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடியாக பெற்ற பணத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இவர் சொகுசு பங்களா, விலையுயர்ந்த பரிசு பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் முன்னணி மருந்து நிறுவனமான ரான்பாக்ஸியின் உரிமையாளர்கள் சிவந்தர் சிங், மல்விந்தர் சிங் ஆகியோர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்துக் கொண்டே அவர்களது மனைவியை தொடர்புக் கொண்டு, கணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க தான் உதவுவதாக சுகேஷ் கூறினாராம்.
இதற்காக ரூ 200 கோடி வரை செலவாகும் என கூறி அந்த பணத்தை அவர்களிடம் இருந்து பறித்து மோசடி செய்ததாக புகாரின் பேரில் சுகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் புகார்தாரர் சிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிற்கு ரூ 217 கோடி வழங்க தயாராக இருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில் சுகேஷ் சந்திரசேகரின் உரிமைகளுக்கு பாதிப்பின்றி இந்த சமரசம் செய்யப்படுகிறது. இது குற்றத்தை ஒப்புக் கொள்வது ஆகாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு ஜனவரி 3ல் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications