வங்கி அக்கவுண்ட் இருக்கா? நாமினி ரூல்ஸில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றம்.. இனி 4 பேரை சேர்க்கலாம்
டெல்லி: ஒரு வங்கி கணக்கிற்கு 4 நாமினிகளை நியமிக்க வழி வகை செய்யும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கிகளின் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கில் ஒரு நாமினியை மட்டுமே சேர்க்க முடியும். புதிய மசோதாவின்படி ஒரு வங்கி கணக்கிற்கு 4 நாமினிகளை அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நியமித்துக் கொள்ளலாம்.
நம் நாட்டில் தற்போது வங்கி கணக்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரசின் திட்டங்களில் வழங்கப்படும் நிதி உதவிகூட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் உள்ள வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது ஒரு நாமினியாக ஒருவரை மட்டுமே நியமிக்கப்படும் என்ற நிலை உள்ளது.

நாமினியாக 4 பேர்: வங்கியில் உள்ள பணம், கணக்குதாரர்கள் இல்லாத நிலையிலும் கூட வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் இன்றி சென்று சேருவதற்காக இந்த நாமினி நடைமுறை உள்ளது. தற்போது ஒருநபரை மட்டுமே நாமினியாக சேர்க்க முடியும் என்ற நிலையை மாற்றி 4 பேரை நாமினியாக சேர்க்க வழி வகை செய்யும் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத் திருத்த மசோதா: லோக்சபாவில் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்தார். தற்போது வங்கிகள், சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், ஒரு 'நாமினி'யை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்குகின்றன. இதனால், அக்கவுண்ட் ஹோல்டர் மரணத்துக்குப் பின், பல்வேறு காரணங்களால், அந்தப் பணத்தை குடும்பத்தார் பெறுவதில் சிக்கல் உள்ளது.
கேபினட் ஒப்புதல்: இதற்கு தீர்வு காணும் விதமாக இந்த மசோதா தக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள், லாக்கர் உள்ளிட்டவற்றை குடும்பத்தினர் பெறும் வகையில், வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு, 4 பேர் வரை நாமினிகளாக நியமிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் அளித்தது.
10 ஆண்டாக நீட்டிப்பு: இந்த மசோதாவில், உரிமை கோரப்படாத லாப ஈவுத்தொகை, பங்குகள், வட்டி ஆகியவற்றை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு மாற்ற அனுமதி அளிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டும் இன்றி ஆடிட்டர்களுக்கு ஊதியம் எவ்வளவு என்று தீர்மானிப்பதில் வங்கிகளுக்கு சுதந்திரம் அளிப்பதற்கும் மசோதா வகை செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர் பதவிக்காலம் எட்டு ஆண்டுகளுக்கு பதிலாக பத்து ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் பதில்: வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தரவுகள் அளிப்பதற்கான நாட்கள், மாதத்தின் 15 ஆம் தேதி மற்றும் கடைசி வேலைநாளாக மாற்றப்படுகின்றன. இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம், மாநில அரசுகளுக்குத்தான் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், கூட்டுறவு சங்கங்களை சிறுமைப்படுத்தப்படவில்லை. வங்கிச்சேவையை தவிர, மற்ற அனைத்தையும் கூட்டுறவு சங்கங்கள் செய்கின்றன. வங்கி நடத்த உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு விதிமுறை இருக்க வேண்டும். எனவேதான், வழி காட்டி இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications