அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை.. நாட்டிலேயே திமுகவுக்கு 2ஆம் இடம்! முதல் இடம் எந்த கட்சி தெரியுமா
டெல்லி: மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டு உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் நன்கொடை கிடைக்கும். பொதுவாகத் தேர்தல் காலத்தில் இந்த நன்கொடை அதிகமாகவும் மற்ற காலத்தில் சற்று குறைந்தும் இருக்கும்.
நமது நாட்டின் சட்டப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெறும் நன்கொடைகளைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகள் என அனைத்திற்கும் இது பொருந்தும்.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்
அதன்படி கடந்த 2020-21ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலக் கட்சிகளும் பெற்ற நன்கொடை தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த தகவலின் அடிப்படையில் அதிக நன்கொடை பெற்ற கட்சிகள் குறித்த விவரத்தை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் வெறும் 5 அரசில் கட்சிகள் மட்டுமே பெரும்பான்மையான நன்கொடையைப் பெற்றது தெரிய வந்துள்ளது.

முதலிடம் எந்த கட்சிக்கு
2020-21ஆம் ஆண்டில் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடைகளில் சுமார் 91 சதவீதம், அதாவது 113.791 கோடி ரூபாய் வெறும் ஐந்து கட்சிகளுக்கு மட்டுமே சென்று உள்ளதாகத் தேர்தல் உரிமை அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாகப் பீகாரில் ஆளும் கூட்டணி அரசில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு 60.15 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்து உள்ளது. மாநிலக் கட்சிகளிலேயே இது தான் அதிகம் ஆகும்.

திமுக இரண்டாம் இடம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ரூ 59.24 கோடி தொழிற்துறையினரிடம் இருந்தும் ரூ. 90 லட்சம் பொதுமக்களிடம் இருந்தும் நன்கொடை கிடைத்து உள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் திமுக உள்ளது. திமுகவுக்கு சுமார் 33 .99 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்து உள்ளது. மேலும், 2019-20 ஆண்டு உடன் ஒப்பிடுகையில் திமுகவுக்கு நன்கொடை மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்து உள்ளதாகவும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தெரிவித்து உள்ளது.

ஆம் ஆத்மி
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி உள்ளது. அந்தக் கட்சிக்கு 11 கோடி ரூபாய் நன்கொடை மூலம் கிடைத்து உள்ளது. சுமார் 9 கோடி ரூபாய் தொழிற்துறையினரிடம் இருந்தும் ரூ. 2 கோடி பொதுமக்களிடம் இருந்தும் நன்கொடை கிடைத்து உள்ளது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் நான்காம் இடத்திலும் தெலங்கானாவில் இருக்கும் டிஆர்எஸ் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

அதிகரிப்பு
இந்த 5 கட்சிகளுக்கு மட்டும் ஒட்டுமொத்த நன்கொடையில் சுமார் 91% சென்று உள்ளது. கடந்த 2019-20 ஆண்டு உடன் ஒப்பிடுகையில் ஐக்கிய ஜனதா தளம், திமுக, டிஆர்எஸ் கட்சிகளின் நன்கொடை அதிகரித்து உள்ளது. அதேநேரம் ஆம் ஆத்மி மற்றும் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் நன்கொடை குறைந்துள்ளதாகவும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தெரிவித்து உள்ளது.

தாமதம்
இந்த அறிக்கையில் கூறப்பட்ட 54 மாநிலக் கட்சிகளில், வெறும் 6 கட்சிகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்குள் நன்கொடை குறித்த தகவல்களைச் சமர்ப்பித்து உள்ளன. 25 கட்சிகள் தாமதமாகவே நன்கொடை விவரங்களைச் சமர்ப்பித்து உள்ளன. ஜார்கண்டை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி உள்ளிடவை இன்னும் தங்கள் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை.












Click it and Unblock the Notifications