நேற்று மனைவி.. இன்று லாலு பிரசாத்.. சுத்துப்போட்ட சிபிஐ.. பரபர விசாரணை! அடுத்த அதிரடி.. என்னாச்சு?
லாலு பிரசாத் யாதவ் 2004-2009 காலத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக செயல்பட்டபோது ரயில்வேயில் வேலை பெற்றவர்களிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.
டெல்லி: ரயில்வேயில் வேலை பெற்றவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று அவரது மனைவி ராப்ரி தேவியிடம் 5 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று டெல்லியில் வைத்து லாலு பிரசாத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்போது அவர் ஓய்வு எடுத்து வரும் நிலையில் சிபிஐ அதிகாரிகள் சுத்துப்போட்டுள்ளனர்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவர் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராப்ரி தேவி. இவரும் பீகாரின் முன்னாள் முதல்வர் ஆவார். இந்த தம்பதியின் மகன் தேஜஸ்வி யாதவ் தான் தற்போது பீகாரில் துணை முதல்வராக உள்ளார்.
லாலு பிரசாத் பீகார் முதல்வராக மட்டுமின்றி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல், முறைகேடு புகார்கள் உள்ளன. மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லியில் ஓய்வு
இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை சிங்கப்பூரில் மேற்கொண்டார். லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரோஹிணி சிறுநீரகம் தானம் செய்தார். சிகிச்சைக்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தான் லாலு பிரசாத் யாதவ் தற்போது புதிய சிக்கலை எதிர்கொள்கிறார்.

லஞ்சம் பெற்ற புகார்
அதாவது கடந்த 2004 முதல் 2009 ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பீகாரை சேர்ந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வழங்கி அவர்களிடம் இருந்து லஞ்சமாக நிலம் அல்லது மார்க்கெட் மதிப்பை விட குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இவ்வாறு வாங்கிய நிலத்தை அவர் தனது குடும்பத்தினரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றப்பத்திரிகை
இதுபற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் 14 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் மார்ச் 15ல் விசாரணைக்கு ஆஜராகும் படி வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

லாலுவிடம் விசாரணை
இந்நிலையில் தான் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள வீட்டில் லாலுவின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. அவரிடம் 5 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பந்தாரா பார்க் பகுதி மிஷா பாரதி எனும் பெயர் கொண்ட இல்லத்தில் வைத்து லாலு பிரசாத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை 10.40 மணிக்கு 2 காரில் சிபிஐ அதிகாரிகள் வந்து விசாரணை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவரது இல்லத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதற்கிடையே தான் சிபிஐயின் செயல்பாட்டுக்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
அரசியல் உள்நோக்கத்தில் பாஜக மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி குடும்பத்தை பழிவாங்குவதாக காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications