ஒன்றா.. இரண்டா... ரூ.200 கோடி.. அக்னிபாத் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு இழப்பு! பகீர் தகவல்
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் ரூ.200 கோடி அளவுக்கு இந்திய ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா செகந்திராபாத்திலும் ரயில் மறியல் போராட்டம் தீவிரமானது.

234 ரயில்கள் ரத்து; 12 தீக்கிரை
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி நாடு தழுவிய போராட்டங்களால் மொத்தம் 340 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை துவங்கிய போராட்டம் முதல் இன்று வரை மொத்தம் 12 ரயில்கள் தீக்கிரையாகி உள்ளன. அதோடு 94 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 140 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 65 மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் 30 பயணிகள் ரயில்கள் பாதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கிழக்கு மத்திய ரயில்வேயில் 164 ரயில்கள், வடகிழக்கு ரயில்வேயில் 34, வடக்கு ரயில்வேயில் 13 மற்றும் வடகிழக்கு எல்லையோர ரயில்வேயில் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி இழப்பு
இந்நிலையில் போராட்டத்தின் காரணம் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி தானாபுரம் ரயில்வே பிரிவு டிஆர்எம் பிரபாத் குமார் கூறுகையில், ‛‛ ரயில் நிலையங்களில் ஏற்பட்ட போராட்டம், வன்முறையில் மொத்தம் 50 பெட்டிகள், 5 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன. மேலும் கணினிகள் சேதப்படுத்தப்பட்டு தொழில்சார் கருவிகள் சிதிலமடைந்துள்ளன. உள்கட்டமைப்புகளும் சீர்க்குலைந்துள்ளதோடு ஏராளானர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமா ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

பீகாரில் மீண்டும் தீவைப்பு
மேலும் போராட்டத்தின் காரணமாக இன்று கிழக்கு ரயில்வே சார்பில் பீகார், மேற்குவங்கத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று பீகாரில் சில அமைப்புகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் தொடர்ந்து 4 வது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னா-கயா வழித்தடத்தில் உள்ள மசரி ரயில் நிலையத்துக்கு இன்று போராட்டக்காரர்கள் திடீரென்று நுழைந்தனர். அவர்கள் ரயில் நிலையத்தில் தீவைக்க முயன்றனர். போலீசார் விரட்டியதால் அவர்கள் ஓடிவிட்டனர். இருப்பினும் தரேகானா ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

உபியில் மறியல் - கைது
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜில் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் போராட்டக்காரர்கள் இன்று மறியல் செய்ய முயன்றனர். போலீசார் விரட்டியதால் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செகந்திராபாத்தில் 100 பேர் கைது
இதற்கிடையே நேற்று தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போராட்டம் நடந்தது .ரயில் எரிக்கப்பட்ட நிலையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications