அமித்ஷா நோ.. ஜேபி நட்டாவை மட்டும் சந்தித்த அதிமுக தலைவர்கள்.. அண்ணாமலைக்கு செக்?
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைக்காத நிலையில், அதிமுக தலைவர்கள் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தனர். அப்போது அண்ணாமலையின் பேச்சுக்கள் கூட்டணியின் வலிமையை குறைக்கும் என்று கூறியதாக டெல்லி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் பேச்சால் அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா மற்றும்அ ண்ணா குறித்து அண்ணாமலையின் பேச்சுக்கள் கூட்டணியில் பெரிய பிரச்சனையையே உண்டாக்கியது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றும் அதிமுக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.

ஜெயகுமார்,செல்லூர் ராஜூ, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் என அதிமுக தலைவர்கள் பலர் அடுத்தடுத்து அண்ணாமலையை கண்டித்து பேசினர். ஒரு கட்டத்தில் ஜெயக்குமார் கோபத்தின் உச்சத்திற்கு போய் பாஜக அதிமுக இடையே கூட்டணி இல்லை என்று அறிவித்தார். ஜெயகுமார் இப்படி அறிவித்த போதும், அடுத்த சில நாட்களிலேயே காட்சிகள் மாறி உள்ளன.
அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் , கேபி முனுசாமி உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். ஏற்கனவே சிவி சண்முகம் டெல்லியின் தான் இருக்கிறார்.
இவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.ஆனால் அவர்களுக்கு நேரம் தரப்படவில்லை. டெல்லி பாஜக எம்பி விவகாரம் சர்ச்சையாகி உள்ளதால், அந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் , கேபி முனுசாமி, சிவி சண்முகம், உள்ளிட்டோர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தனர். அப்போது அண்ணாமலையின் பேச்சுக்கள் கூட்டணியின் வலிமையை குறைக்கும் எனறு ஜேபி நட்டாவிடம் அவர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஜேபி நட்டா, அதிமுக நிர்வாகிகள் கருத்தை பொறுமையாக கேட்டதுடன். அவர்களின் கருத்துககளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜேபி நட்டாவின் இல்லத்தில் சுமார் 10நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்ததாவும் டெல்லி ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக எடப்பாடி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் டெல்லி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை அறிய எடப்பாடி காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று அதிமுக வட்டாரங்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications