மக்கள் தயக்கம்... 5000 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து நாசம்
டெல்லி : தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருவதால் 5 மாநிலங்களில் சுமார் 5000 டோஸ் தடுப்பு மருந்துகள் நாசமாகி உள்ளது. இவற்றில் அதிகப்டசமாக திரிபுராவில் 11 சதவீதம் மருந்துகள் வீணாகி உள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 ம் தேதி துவங்கி, நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பு மருந்துகள் வீணாகி வருகின்றன.

தடுப்பு மருந்து பெட்டிகள் திறக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் அவை பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள போதிய அளவில் மக்கள் யாரும் வராததால், அதிக அளவில் வீணாகி உள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாளில் மக்கள் வராததும், போதிய வெப்பநிலையில் அவைகள் பாதுகாக்கப்படாததும் இதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால் பெறும் 55 பேர் மட்டுமே தடுப்பூசியை குறித்த நாளில் வந்து போட்டுக் கொள்கிறார்கள்.
பஞ்சாப்பில் 1200 டோஸ்களும், பீகாரில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்திரகாண்டில் 4.1 சதவீதம் டோஸ் மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் 0.58 சதவீதம் வீணாகி உள்ளது.
அதே சமயம் ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம், மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மருந்துகள் ஏதும் வீணடிக்கப்படவில்லை என அம்மாநிலங்களின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications