மத்திய அமைச்சரவை அதிரடி மாற்றம்? மோடியை தொடர்ந்து ஜனாதிபதியை சந்தித்த அமித்ஷா.. பிளான் என்ன?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த பேசிய நிலையில் இதுபற்றிய விவாதம் தீவிரமாகி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரைவில் அதிகபட்சமாக 81 பேர் வரை இடம்பெற முடியும். ஆனால் பிரதமர் மோடியின் அமைச்சரவை 71 பேருடன் செயல்பட்டு வந்தது. 10 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான பொறுப்புகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தல் மற்றும் மத்திய அமைச்சர்களாக இருந்த ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்தது, முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சி சார்ந்த பொறுப்புகள் வழங்கியது உள்ளிட்டவற்றின் காரணமாக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசினர்? என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் திரெளபதி முர்மு, அமித்ஷா சந்திப்பை ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ''மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்தார்'' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இருவரும் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 23ம் தேதி பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து பேசிய நிலையில் நேற்று அமித்ஷா நேரில் பேசியுள்ளார். மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும்போது ஜனாதிபதி தான் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இதனால் மோடி, அமித்ஷாவின் அடுத்தடுத்த இந்த சந்திப்புக்களால் விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications