"இந்தியா" கூட்டணியில் மோதல்? "போதைக்கு அடிமை!" காங்கிரஸ் எம்எல்ஏ கைது விவகாரத்தில் கெஜ்ரிவால் பரபர
டெல்லி: காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என இரு கட்சிகளும் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் நிலையில், பஞ்சாபில் நடக்கும் சில சம்பவங்கள் கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கே பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை நடந்து வருகிறது. அங்கே பிரதான கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. இரு கட்சிகளும் தேசிய அளவில் "இந்தியா" கூட்டணியிலேயே இருக்கிறது.

அதேநேரம் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் நேரடியாக எதிர் எதிராக உள்ளது. இரு கட்சிகளும் காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏவை கைது செய்து அதிர்ச்சி கொடுத்தது ஆம் ஆத்மி.
கைது: அதாவது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால்சிங் கைரா.. கடந்த 2015ஆம் ஆண்டு போதைப் பொருள் விவகாரத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் இது குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுக்பால் சிங்கை ஜலாலாபாத் போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு கட்சிகளுமே "இந்தியா" கூட்டணியில் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை புகைச்சலை ஏற்படுத்தியது. இதற்கிடையே பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் இந்த நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் வகையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாட்டியாலாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், கூட்டணியின் நலனுக்காகச் சொந்த கட்சியை விட்டுத் தர முடியாது என்று பேசியிருக்கிறார்.
கெஜ்ரிவால் பரபர: இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் முக்கிய நபர் ஒருவரைக் கைது செய்தோம். பகவான் மான் எதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தார் என அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நான் அனைவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றைத் தான்.. நாங்கள் எந்த கட்சிக்கும், எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் எதிரானவர்கள் இல்லை. நாங்கள் போதைப்பொருளுக்கு எதிரானவர்கள் அவ்வளவுதான்.
போதைக்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் எங்களை ஆதரிக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே வேண்டுகோள். உங்கள் கட்சியில் யாராவது போதைக்கு அடிமையாக இருந்தால், அவரை கட்சியில் இருந்து தூக்குங்கள்.. எங்கள் கட்சியில் இப்படி யாராவது இருந்தால் அவர்களையும் நிச்சயம் வெளியேற்றுவோம். ஒரு காலத்தில் பஞ்சாப் போதைப் பொருட்களின் நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த உட்தா பஞ்சாப் என்ற படத்தில் கூட இதை விளக்கி இருப்பார்கள்.
தீவிர நடவடிக்கை: அனைவரும் பஞ்சாபை நாட்டின் போதைப்பொருள் தலைநகர் என்றே நினைத்தார்கள். இப்போதும் கூட போதைப்பொருள் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்துவிட்டோம் எனச் சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் நிறைய பணிகள் இருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாடு முழுக்க இதுவே இப்போது பேச்சாக இருக்கிறது" என்றார். அவர் காங்கிரஸ் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
தேசியளவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என இரு கட்சிகளுமே "இந்தியா" கூட்டணியில் தான் இருக்கிறது. ஆனாலும், பஞ்சாபில் இருவரும் நேர் எதிராக இருக்கும் நிலையில், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் கூட்டணி இருக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications