பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு!
டெல்லி: பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும், தகுதி தேர்வு போட்டியில் பங்கேற்காமல் நேரடியாக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அளித்த அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் இன்றும் நாளையும் (ஜூலை 22,23) நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி இதனை நடத்துகிறது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளித்து ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அனுமதி அளித்தது.
பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவருக்கும் ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டதற்கு சக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையான அந்திம் பன்ஹால் கூட்டாக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது மனுவில் எந்தவொரு வீரருக்கும் மல்யுத்த அணிக்கான தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது. தகுதித் தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். தகுதி தேர்வுக்கான போட்டியை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், தீர்ப்பை இன்றைக்கு (ஜூலை 22) தள்ளிவைத்தார். மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications