ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் விமான பயணம்... 16% உயர்ந்த விமான எரிபொருள் விலை
டெல்லி: இந்தியாவில் விமான எரிபொருள் விலை 16% சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதால் விமான பயண கட்டணங்கள் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஏடிஎஃப் எனப்படும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை ஒன்றாம் தேதி மற்றும் 16 ஆம் தேதிகளில் மாற்றப்பட்டு வருகிறது.

தொடர் விலையேற்றம்
இதற்கு முன்பாக கடந்த மார்ச் 16 ஆம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம், அதாவது ரூ.17,135.63 உயர்த்தப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதி 2 சதவீதமும், ஏப்ரல் 16 ஆம் தேதி 0.2 சதவீதமும், மே ஒன்றாம் தேதி 3.2 சதவீதம், மே 16 ஆம் தேதி 5.3 சதவீதம் என தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி 1.3 சதவீதம் விலை குறைக்கப்பட்டது.

16% விலையேற்றம்
இந்த நிலையில் தற்போது ஜூன் 16 ஆம் தேதி 16 சதவீதம் விமான எரிபொருள் விலை உயர்வை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.19,757.13 ஆக உயர்ந்து தற்போது ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இதன் விலை ரூ.1.46 லட்சமாகவும், மும்பையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.1.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

விமான டிக்கெட் விலை
10 முறை விலை உயர்த்தப்பட்ட பின் 15 நாட்களுக்கு முன் 1.3 சதவீதம் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போதைய விலையேற்றம் விமான நிறுவனங்களை அதிர வைத்துள்ளது. விமான எரிபொருள் விலையேற்றத்தால் விமானத்தை இயக்குவதற்கான செலவும் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்டுவதற்காக விமான பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் நிர்பந்தத்திற்கு விமான நிறுவனங்கள் தள்ளப்படும் என்று அஞ்சப்படுகிறது.

காரணம் என்ன?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சர்வதேச அளவிலேயே எரிபொருள் விலை ஏற்றத்தை சந்தித்து உள்ளது. அதுவும் இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை மாற்றியமைக்கும் முறை இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் முறையின்றி விலையை நிர்ணயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றன.












Click it and Unblock the Notifications