வரலாற்றில் இடம் பிடித்த சனிக்கிழமை.. 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!
Recommended Video
டெல்லி: பொதுவாக எந்த வழக்கிலும் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் இன்று வெளியான 70 ஆண்டுகால அயோத்தி வழக்கின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

5 நீதிபதிகள்
இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் உள்ளனர்.

தோல்வி
இந்த 5 பேரும் விசாரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. மத்தியஸ்தம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் வழக்கை நீதிபதிகளே விசாரித்தனர்.

தீர்ப்பு
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வந்தது. அக்டோபர் 16-ஆம் தேதி விசாரணையை முடித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

ஓய்வு
இந்த நிலையில் வரும் 17-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளதால் அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் அதற்குள்ளாக தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை 5 பேர் கொண்ட நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு வழங்குகின்றனர்.

உஷார் நிலை
இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உஷார் நிலை நீடிக்கிறது. ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய தீர்ப்புகள்
பொதுவாக சனிக்கிழமைகளில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது வழங்கப்படாது. அது மிகவும் அரிது. ஆனால் முக்கிய வழக்குகள் அல்லது அவசர வழக்குகளில் மட்டுமே விடுமுறை நாட்களில் தீர்ப்பு அல்லது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.

சனிக்கிழமை தீர்ப்பு
அந்த வகையில் இன்று வெளியான 70 ஆண்டு கால அயோத்தி வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இன்று சனிக்கிழமையாக இருந்தாலும் இன்றைய தினமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.












Click it and Unblock the Notifications