மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.. சித்தாந்ததிற்கான போர் தொடரும்.. தேர்தல் முடிவு பற்றி ராகுல் காந்தி
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களின் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். சித்தாந்தத்திற்கான போர் தொடரும். கடினமாக உழைத்த கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி கூரியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக தற்போது அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும் ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடைபெற்றது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றது.
காங்கிரசுக்கு அதிர்ச்சி: வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி கருத்து: இதனால், தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வர தயராக இருந்த காங்கிரஸ் தொண்டர்களும் தோல்வியால் முகம் வாடிப்போகினர். சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் சித்தாந்ததிற்கான போர் தொடரும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களின் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். சித்தாந்ததிற்கான போர் தொடரும். கடினமாக உழைத்த கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications