மீண்டும் சீனில் வந்த அண்ணா ஹசாரே.. பாஜகவின் “துப்பாக்கிய” தூக்கியிருக்காரு! கலாய்த்த கெஜ்ரிவால்
டெல்லி: மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக பாஜகவினர் கூறுவதாகவும் ஊழல் நடக்கவில்லை என்று சிபிஐ சொல்வதாகவும், தற்போது துப்பாக்கியை அண்ணா ஹசாரேவின் தோளில் ஏற்றி இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. மேலும் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
டெல்லி அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. உடனே கெஜ்ரிவால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவை உறுதி செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று கூடிய டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி வந்தனர். அதற்கு பதிலடியாக ஆளுநர் சக்சேனா பதவி விலக வேண்டும் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா ஹசாரே கடிதம்
இந்த நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "மதுவை போல அதிகாரமும் போதை தரும். நீங்கள் தற்போது அதிகார போதையில் மிதப்பதுபோல் தெரிகிறது. நீங்கள் முதல்வரான பிறகு நான் எழுதும் முதல் கடிதம் இது. ஏனென்றால், கடந்த சில நாட்களாக உங்கள் அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக செய்திகளில் வெளியாகும் தகவல் எனக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.

மதுபானக் கொள்கை
உங்களின் ஸ்வராஜ் புத்தகத்தில் மதுபானக் கொள்கை குறித்த உங்களின் கொள்கைகளை குறிப்பிட்டு இருந்தீர்கள். அதில் என்னை முன்னுரை கூட எழுத வைத்தீர்கள். அந்த புத்தகத்தில், வசிக்கும் மக்களின் ஒப்புதல் இன்றி எந்த மதுக்கடைகளும் திறக்ககூடாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு இது அனைத்தையும் மறந்து விட்டீர்கள்போல் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி நீங்ளும் மணிஷ் சிசோடியா உள்பட சிலராலும் உருவாக்கப்பட்டது.

வித்தியாசமே இல்லை
தற்போது பிற கட்சிகளிடம் இருந்து எந்த வித்தியாசமும் ஆம் ஆத்மியிடம் இல்லை. இதுபோன்ற தவறான மதுபானக் கொள்கை இந்தியாவில் எங்கும் வகுக்கப்படவில்லை. டெல்லியில் மூலை முடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்து விட்டன. ஒரு பெரிய இயக்கத்தின் மூலமாக உருவான கட்சிக்கு இது பொருத்தமாக இல்லை. வலுவான லோக்பால், ஊழலுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக நீங்கள், மக்களுக்கு எதிரான மதுபானக் கொள்கையை கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் கருத்து
இதுகுறித்து டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஊழல் நடக்கவில்லை என்று சிபிஐ கூறுகிறது. மக்கள் அவர்கள் பேச்சை கேட்கவில்லை. இப்போது துப்பாக்கியை அண்ணா ஹசாரேவின் தோளில் வைத்திருக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்." என்றார்.












Click it and Unblock the Notifications